//பதினைந்து நாட்களுக்கு முன்னால் எனது அலைபேசியில் CELEBRATE-969 என்ற தகவல் குறுஞ்செய்தியாக அ.கொ.தீ.கவின் பிராந்திய தலைமையகத்திலிருந்து வந்தது. நமக்கு ஃபிளைட் 731, ஃபார்முலா X13, 007, 009, 001 ஏன் A-Z கூட தெரியும். CELEBRATE-969 என்றால் ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் நண்பர் விஸ்வா சொன்னார் 969 என்பது 2009ம் வருடம் ஜுன் மாதம் 9 ம் தேதியை குறிக்கும் என்றும், அன்றுதான் (அதாவது இன்றுதான்!) தன்னிகரில்லா தானைத்தலைவரும், நடமாடும் காமிக்ஸ் களஞ்சியமும், அ.கொ.தீ.காவின் நிறுவன மற்றும் நிறுவிய நிர்வாகத் தலைவருமான டாக்டர் செவனின் பிறந்த நாள் என்று! மேற்படி விவரப்படி தலைவரின் பிறந்தநாளை கொண்டாடும் பொருட்டு தமிழ் கூறும் நல்லுகத்திற்கு இந்த பதிவை அர்ப்பணிக்கிறேன்!// என்று பதிவை ஆரம்பிக்க எனக்கும் ஆசையாகத்தான் உள்ளது. ஆனால், என்ன செய்வது? எனக்கு எந்த தகவலும் வர வில்லை. அதனால் தான் இந்த பில்ட் அப ஆரம்பம். சரி, சரி - போதும் என்று நீங்கள் சொல்வதற்கு முன்பு தானைத்தலைவர் டாக்டர் செவனின் பிறந்த நாள் பரிசாக அவர் நீண்ட நாட்களாக இரண்டு கண்களும் வைத்து இருந்த மாடஸ்டி பிளெய்சி பற்றிய ஒரு பதிவு இடலாம் என்று நினைத்தேன். ஆனால், நமது வலைப்பூ விதிகளுக்கு மாறாக பதிவிடும் எண்ணம் இல்லாததால் அதற்க்கு பதிலாக லேடி ஜேம்ஸ் பாண்ட் மாடஸ்தி (வித்தியாசத்தை கவனியுங்கள்) பற்றிய இந்த பதிவை இடுகிறேன்.
தமிழ் காமிக்ஸ் உலகில் முத்து, மாலைமதி, லயன் குழும காமிக்ஸ் இதழ்கள், பாலகன், மற்றும் முல்லை தங்கராசன் பணியாற்றிய அசோக் மேத்தா காமிக்ஸ், மாயாவி காமிக்ஸ் தவிர மற்ற இதழ்களில் மொழி நடை மிகவும் சிறப்பானதாக இல்லை என்பது உலகறிந்த உண்மை. இந்த வரிசையில் ராணி காமிக்ஸ் இல்லாதது குறித்து சிலர் கேள்வி கேட்கலாம்.
ஆனால், ஆரம்ப முதலே ராணி காமிக்ஸ் (ராமஜெயம் இருந்த போதும் சரி - சென்று விட்ட போதும் சரி) இந்த வரிசையில் இடம் பெற இயலாது என்பதை காமிக்ஸ் ஆர்வலர்கள் கூறுவர். ஆரம்ப கால ராணி காமிக்ஸ் கதைகளில் (ராமஜெயம் இருந்த போது) கதையின் தரம் மட்டுமே அதனை உயர்த்திக் காட்டியது. மொழ்கியாக்கம் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை. சில குறிப்பிட்ட கதைகளில் கதையின் சிறப்பை மொழியாக்கம் தடுத்து விட்டதையும் நண்பர்கள் அறிவார்கள். ராமஜெயம் சென்ற பிறகு? சொல்லவே வேண்டாம். குப்பை என்ற வார்த்தைக்கு விடை அந்த மொழியாக்கங்களும் அதில் வந்த கதைகளும் தான். என்னடா, இவ்வளவு வெறுப்பாக எழுதுகிறானே என்று நினைக்க வேண்டாம். காமிக்ஸ் கதைகளில் நான் படித்தவைகளில் மிகவும் சிறந்த ஒன்றாக நான் கருதுவது மாடஸ்டி வரிசைகளை தான். அதிலும் குறிப்பாக மாடச்டிக்கும் கார்வினுக்கும் இருக்கும் அந்த உறவை மிகவும் நுணுக்கமாக கையாண்டு இருப்பார்கள் (எக்ஸ் பைல்ஸ் வெற்றி பெற்றதற்கு காரணமும் அதில் வரும் டேனா ஸ்கல்லி மற்றும் பாக்ஸ் மோல்டர் இடையே இருக்கும் உறவே ஆகும் - திரைப் படத்தில் சொதப்பி இருப்பார்கள் - அது வேறு விஷயம்).
ஆனால் ராணி காமிக்ஸ் இதழில் முதன் முதலாக மாடஸ்டி கதை வருவதாக விளம்பரம் வந்த போது என்னுடைய நண்பன் மால்டா மகேஷ் (இப்போது கோயம்புத்தூரில் இருக்கிறான் - சமீபத்தில் பயங்கரவாதி டாக்டர் செவன் அவனை சந்தித்ததாக கேள்வி) மிகவும் சந்தோஷப் பட்டான்.
ஆனால், அந்த கதை (பெண் சி.ஐ.டி) வந்த போது மனம் நொந்து பொய் காமிக்ஸ் படிப்பதையே தற்காலிகமாக விட்டு விட்டான். எனென்றால் அதில் வில்லி கார்வின் மாடச்டியின் காதலனாம், மாடஸ்டி என்ற பெயர் மாடஸ்தி என்று மாற்றப் பட்டதோடில்லாமல் அவள் ஒரு அரசாங்க உளவாளி என்றும் கதையை மாற்றி கொன்று இருப்பார்கள். (கதையையும், கதாபாத்திரத்தையும்).
சரி, இதனைக் கூட சில பல வாசகர்கக் சகித்துக் கொண்டு இருக்கலாம். ஆனால், திடிரென்று ஒரு நாள் இந்த பதிவு சம்பந்தப் பட்ட புத்தகம் வந்தது. வழக்கமாக மற்ற காமிக்ஸ் இதழ்களை கண்டுக் கொள்ளாத விஜயன் சார் கூட இதனைப் பற்றி அவருடைய ஹாட் லயனில் எழுதி இருப்பார். இளவரசியை தேடி என்று ஏப்ரல் பூல் ஆக வந்த இந்த கதையை பற்றி வாசகர்கள் யாரும் தயவு செய்து திரு பீட்டர் ஒ டோன்னல் இடம் கூறி விடாதீர்கள். பாவம், இந்த வயதான காலத்தில் இதனைப் போன்ற அதிர்ச்சியை தாங்கும் மனோவலிமை அவருக்கு கண்டிப்பாக இருக்காது. தயவு செய்து இதனை யாரும் டிரான்ஸ்லேட் செய்து ஆங்கிலத்தில் போட்டு விடாதீர்கள்.
கதை (அப்படி ஒன்று இருந்தால் சரி) எப்படி ஆரம்பிக்கிறது என்றால் - மாடஸ்தி ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும் போது அவளுக்கு போலீஸ கமிஷனர் இடமிருந்து ஒரு கால் வருகிறது. உடனே மாடஸ்தி தன்னுடைய போலீஸ உடையை அணிந்து கொண்டு கமிஷனர் அலுவலகம் செல்கிறாள்.
ஓஒ, ஒரு புயல் ஒன்று புறப் பட்டதே,
ஓஓ, ஒரு பெண் சிங்கம் கிளம்பி விட்டதே,
ஓஓ, தர்ம யுத்தம் ஒன்று ஆரம்பம் ஆகி விட்டதே. ஏ ஏ ஏ
என்று எனக்கு தெரிந்த கொலை வெறி கவிஞர் ஒருவர் கவிதை வேறு எனக்கு எழுதி அனுப்பினார்.
பின் குறிப்பு: மாடஸ்தி தொலைக் காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்தது இந்திய புருஸ் லீ தனுஷ் நடித்த ஆக்ஷன் படத்தை என்று செக்கொஸ்லொவக்கியாவில் இருந்து செங்கமலம் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த கொடுமையை சற்று பாருங்கள் ஐயா. மொராக்கோ போலிசால் எதுவும் செய்ய முடியவில்லையாம். அவர்கள் சர்வதேச போலி உதவியை நாடுகிறார்கள். இதில் எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், சர்வதேச போலீஸ இந்தியாவை சார்ந்த உளவுத்துறையை அணுகாமல் போலீஸ கமிஷனர் அவர்களை அணுகி அவரும் மாடச்தியை அழைப்பது தான் கொடுமை.
இப்போது பிளாஷ் பேக்கில் மொராக்கோ இளவரசி எப்படி கடத்தப் பட்டர் என்பதை போலீஸ கமிஷனர் மாடச்திக்கு விளக்குகிறார். அதாவது மொராக்கோ இளவரசி அழகிப் போட்டியை காண போகிறாராம். அங்கே ஒரு கார் வந்து மொதுகிரதாம். உடனே காரில் இருந்து செக்கியுரிட்டி இறங்கி போய் விசாரிக்கிறாராம். இதை விட காமெடி வேறெங்காவது கேள்விப் பட்டு இருக்கிறீர்களா?
உடனே மாடஸ்தி போலீஸ கமிஷனர் இடம் உத்தரவு பெற்றுக் கொண்டு பாரிசு கிளம்பி செல்கிறாள். அங்கே அவளை பாரிசு விமான நிலையத்தில் வரவேற்கின்றனர். அதற்காக ஒரு பைக்கை விமான நிலையத்தின் உள்ளேயே ஒட்டி வந்து இறங்காமல் வெயிட் செய்துக் கொண்டு இருக்கும் அந்த பாரிசு போலீஸ காரர்களை என்னவென்று சொல்வது?
சில பட்ஜெட் படங்களில் வெளிநாட்டுக்கு போவதை காட்ட விமானம் ஒன்று பறப்பது போன்ற காட்சியை அமைத்து இருப்பார்கள். ஆனால், காமிக்ஸ் கதைகளில் அந்த தேவை இல்லை. இருந்தாலும் மாடஸ்தி விமானத்தில் தான் வந்து இறங்கினால் என்பதை காட்ட அந்த விமானம் அங்கேயே இருப்பதை காணுங்கள். அதைப் போலவே விமான நிலையத்தின் உள்ளேயே பைக்கை ஒட்டிக் கொண்டு வரும் அந்த பாரிசு போலீஸ்காரர் பெயர் என்ன வயகரா மாமாவா?
இப்போது மாடஸ்தி காரில் ஏறப் போகிறாள். அங்கு அவளை வரவேற்க பாரிசு போலீஸ துறையை சார்ந்த ஒரு பெண் அதிகாரி போலீஸ உடையில் வந்து காத்து இருப்பதை பாருங்கள். பின்னர் மாடஸ்தி காரில் ஏறியதும் அந்த காரில் இன்னுமொரு ஆள் பின் சீட்டில் இருக்கிறான். பிறகு கார் வேகமாக போகிறது. என்ன நடக்கிறது இங்கே?
கைப் பையை கொடுப்பதைப் போல மாடச்தியின் அதிரடி அட்டகாசத்தை பாருங்கள். அடி வாங்குபவன் முகத்தில் தான் எத்தனை எத்தனை உணர்ச்சிகள்? ஒரு முன்னுறு டாலர்கள் கிடைக்கிறது என்பதற்காக இந்த கடத்தல் தொழிலுக்கு வந்ததையே, மாடச்தியிடம் அடி வாங்கியதால் வெறுப்பவன் போல அல்லவா இருக்கிறது அந்த ரியாக்ஷன்? அந்த உணர்ச்சி குழம்பை கவனியுங்கள்.
அடுத்து அங்கே வேறென்ன நடக்கும்? மாடச்தியின் அதிரடி சரவெடி தான். கச்சேரி கலை கட்டும்போது அந்த மர்ம எதிரி தப்பி ஓடி விடுகிறான். பின்னர் பாரிசு தலைமை போலீஸ அதிகாரியை மாடஸ்தி சந்திக்கிறாள். அங்கும் இருக்கும் அந்த பெண் போலீஸ அதிகாரி கறுப்புக் கண்ணாடி அணிந்து இருப்பதை கவனியுங்கள். அதிகாரி கூறுவதை சற்று கேளுங்கள்- சர்வதேச சதிகாரர்கள் என்பதால் எல்லா நாடுகளிலும் ஆட்கள் இருப்பார்கள்.
அது சரி - உங்கள் நாட்டில் இருக்கிறார்களே அதற்க்கு என்ன செய்யப் போகிறார் இந்த பாரிசு உயர் போலீஸ அதிகாரி? இந்த போலீஸ அதிகாரியை குறை கூறி ஒன்றும் ஆகப் போவது இல்லை. ஏனென்றால் இந்த பாரிசு உயர் போலீஸ அதிகாரி தான் கார்லா புருனியின் ஒன்று விட்ட மச்சினிச்சியின் மூன்றாவது மருமகனின் இரண்டாவது சகோதரன்.
அடுத்து என்ன ஒரு புத்திசாலித்தனம் என்று நீங்கள் வியந்து போகும் அளவில் சில சிந்தனைகளை செய்து விட்டு மாடஸ்தி குளிக்கப் போகிறாள். இங்குதான் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த "காட்சிகள்" வரும். வயகரா மாமா, விசிலடிக்காமல் கவனியுங்கள். மாடஸ்தி குளிக்கும்போது கூட யோசித்துக் கொண்டே தான் குளிப்பாள் என்பதை காட்டவே இந்த படங்கள். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. அந்த சைட் ஆங்கிள் போஸ் நன்றாக இருந்தது என்று ஒரு பாண்டி மைனர் மின் அஞ்சல் அனுப்பி உள்ளார்.
மாடச்தியின் அறைக்குள் கள்ளச் சாவி போட்டுக் கொண்டு நுழையும் அந்த மர்ம நபர் மாடச்தியை அதிர்ச்சி அடைய செய்கிறான். அப்போது நீ யார் என்று மாடஸ்தி கேட்கும் கேள்விக்கு அவன் சொல்லும் பதிலை படியுங்கள்: நீ 006 என்றால், நான் 005 என்று கூறும் அவன் பதில் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
அட, அது கூட பரவாயில்லை. அடுத்து அவன் கூறும் பன்ச் டையலாகை படியுங்கள்: நீ என்னை பிடிக்க வந்து இருக்கிறாய். நான் உன்னை பிடிக்க வந்து இருக்கிறேன். நான் நினைக்கிறேன், பேரரசு போன்ற நபர்கள் இந்த காமிக்ஸ் கதைகளை படித்து விட்டு தான் வசனங்கள் எழுதுகிறார்களோ?
அடுத்து அவனிடம் இருந்து தப்பிக்க மாடஸ்தி செய்யும் துணிகர செயலை காணுங்கள். உடை அணிய செல்லும் மாடஸ்தி குதி உயர்ந்த காலனியை (என்ன கொடுமைடா இது) கழட்டி அதில் இருக்கும் போனில் இரண்டு காபி கேட்கிறாள். உடனே அழைப்பு மணி அடிக்கிறது.
கதவு மணி ஓசையை கேட்ட அந்த மர்ம நபர் மாடச்தியை கதவை திறக்க சொல்கிறான். கதவை திறக்கும் மாடஸ்தி உடனே வெளியே வந்து கதவை மூடி விட்டு தப்பித்து விடுகிறாள். அதனால் அந்த மர்ம நபர் வருத்தம் அடைகிறான். அவனிடம் இருந்து தப்பித்த மாடஸ்தி ஒரு இரவு விடுதிக்கு செல்கிறாள். அங்கு அவனை தேடுகிறாள்.
இவ்வாறாக மாடஸ்தி ஒவ்வொரு இரவு விடுதியாக நுழைந்து அங்கு நடனத்தை ரசிக்கும் நபர்களில் அந்த மர்ம உளவாளி இருக்கிறானா என்று நோட்டம் விடுகிறாள். பல இடங்களில் அவளுக்கு வருத்தமே மிச்சம். ஆயினும், கடைசியாக ஒரு விடுதியில் அந்த மர்ம உளவாளியை மாடஸ்தி பார்த்து விடுகிறாள்.
இரண்டு வைரிகளும் ஒருவரை ஒருவர் கண்டு கொண்டு விட்டனர். இன்று வேட்டை ஆடப் போவது யார்? வேட்டை ஆடப் படுவது யார் என்று தெரியாத நிலை. ஒருவரை ஒருவர் வைத்த கண் வாங்காமல் அடுத்தவரின் வருகைக்காக காத்து இருந்த இந்த காட்சியை புகழ் பெற்ற கொரியா திரைப் பட இயக்குனர் பார்க் சான் வூக் தன்னுடைய பழி வாங்கும் படலத்தின் முதல் படத்தில் வைத்து இருப்பார்.
அடுத்து மாடஸ்தி அங்கு இருந்து வெளியேறி கழிப்பறைக்கு செல்கிறாள். அந்த மர்ம உளவாளியும் அவளை பின் தொடர்ந்து வருகிறான். பின்னர் அவனிடம் இருந்து தப்பிக்க வழி தேடுகிறாள் மாடஸ்தி. அங்கு உள்ளே வரும் ஒரு பெண்ணை மயக்கமுற செய்து விட்டு அவள் உடையை அணிந்து கொண்டு மாடஸ்தி வெளியேறுகிறாள்.
முக்காடு அணிந்து மாடஸ்தி ஒய்யாரமாக நடந்து போகிறாள் = இதை மட்டும் அந்த புண்ணியவான் பீட்டர் ஒ டோன்னேல் படித்தால் அதோ கதிதான். பாவம், அந்த மனிதர். எவ்வளவு பாடுபட்டு இந்த கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பார். ஆனால், கடைசியில் இப்படி முக்காடு அணிந்து ஒய்யாரமாக நடந்து செல்லும் நிலையா வரவேண்டும் மாடச்திக்கு?
அந்த பெண்ணை மாடஸ்தி இல்லை என்று ஏமாந்த மர்ம உளவாளி பின்னர் பெண்கள் கழிப்பறைக்கு வந்து பார்க்கிறான். பின்னர் மாடஸ்திக்கு உடையை கொடுத்த பெண்ணை மாடஸ்தி என்று நம்பி பின் தொடர்கிறான்.
அடுத்து அந்த பெண்ணை மர்ம உளவால் கடத்திக் கொண்டு காரில் செல்கிறான். அப்போது அவன் கூறும் அந்த பன்ச் டையலாகை கவனியுங்கள்: எந்தக் கிளியும் என் கண்ணிலிருந்து தப்பவே முடியாது.
இப்படியாக கதை செல்கிறது.
அடுத்து நடக்கப் போவது என்ன?
மாடச்தியின் நிலை என்ன ஆயிற்று?
மர்ம உளவாளி உண்மையில் யார்?
மாடஸ்தி உடைகளை கழட்டும் "அந்த" சீன எப்போது வரும்?
மொரோக்கோ இளவரசி என்ன ஆனார்?
என்று பல கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டுமானால், படியுங்கள் ராணி காமிக்ஸ் இதழ் முன்னுத்தி ஏழு "இளவரசியை தேடி".
குடும்ப குத்து விளக்கு நடிகை சிநேகா, பத்தினி தெய்வம் நடிகை நமீதா ஆகியோரைப் போல மாடஸ்தி போலீஸ உடை அணிந்து இருப்பது இந்த கதையின் சிறப்பு அம்சமாகும்.
சென்ற பதிவில் பதிவு சம்பந்தப் பட்ட விஷயத்தை விட அதன் சார்பு படங்களே ரசிகர்களை மிகவும் கவர்ந்து உள்ளதை அறிய முடிந்தது. குறிப்பாக நமீதா படங்கள் பெரிதாக வில்லை என்று ஷங்கர் இங்கே குறை கூறி உள்ளார். ஆனால், இதற்க்கு மேலும் பெரிதானால் ஸ்கிரீன் தாங்காது என்பதாலே இந்த அளவு அமைக்கப் பட்டது என்பது தான் உண்மை.
உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்