பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். சமீப காலமாகவே ஏனோ பதிவிடவே தோன்றவில்லை. அதுவும் அரசியல் களம் சூடுபிடிக்கும் இந்த தருணத்தில் அது சார்ந்த வேலைகள் நம்மை போர் மேகம் போல சூழ்ந்து இருக்க, ஏனோ ஒரு நாளைக்கு இருபத்தி நான்கு மணி நேரம் என்பது சற்று குறைவாகவே தோன்றுகிறது. அதைப்போலவே விஜய் டிவியில் அந்த நேரலை நிகழ்ச்சியில் என்னை அடையாளம் கண்டு கொண்டு மின் அஞ்சல் அனுப்பிய தோழர்களுக்கு நன்றி. நன்றி.
இனிமேல் இந்த தளத்தில் சற்று தகவல் சார்ந்த பதிவுகளை இடலாம் என்று உள்ளேன். அது பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள். பார்க்கலாம். தகவல் சார்ந்த என்றால் இன்று ஒரு காமிக்ஸ் தகவல் போல. அதாவது ஒவ்வொரு நாளும் காமிக்ஸ் வரலாற்றில் நடந்த சன்பவங்களை பற்றிய மினி பதிவாக இருக்கும். உங்களுக்கு ஒக்கே என்றால் எனக்கும் ஒக்கே. பார்க்கலாம், முதலில் வாரம் ஒரு பதிவாவது இட முடிகிறதா என்று. அதன் பின்னர் தினம் ஒரு காமிக்ஸ் தகவல் என்ற கான்செப்டை தொடரலாம். இன்று ஒரு காமிக்ஸ் தகவல் என்ற கான்செப்ட் எப்படி உருவானது என்றால் தமிழ் காமிக்ஸ் உலகில் முக்கியமான கதாநாயகர்கள், சிருஷ்டி கர்த்தாக்கள், படைப்பாளிகள், முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றை உங்களுக்கு அறிமுகம் செய்ய உதவும் ஒரு சாளரம் தேவை என்ற கருத்தின் வெளிப்பாடே.
முதலில் துப்பறியும் சிங்கம் ராயன் அவர்களை பற்றிய தகவலுடன் இன்றைய பதிவை துவக்குகிறேன். சரியாக 74 ஆண்டுகளுக்கு முன்பாக இன்றைய தினத்தில் தான் (22nd March 1937) தமிழில் துப்பறியும் சிங்கம் ராயம் (டிடெக்டிவ் ஜூலியன்) அறிமுகம் ஆனார். அவர் தோன்றியதே ஒரு சுவையான விபத்துதான். இந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவர் பெயர் டான் ப்ரீமன். இவர் இங்கிலாந்தில் வெளிவந்த டெய்லி மிர்ரர் என்ற ஆங்கில தினசரியில் பணிபுரிந்தார். இவரும் ஜாக் மான்க் என்கிற ஓவியரும் இனைந்து எட்கார் வாலஸ் அவர்களின் டெர்ரர் கீப் என்ற தொடரை காமிக்ஸ் வடிவில் கொண்டு வந்திருந்தனர். ஆனால் அந்த கதையின் உரிமம் குறித்த பிரச்சினை காரணமாக அந்த தொடர் திடீரென்று பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. அந்த தொடருக்கு பதிலாக திடீரென்று ஆரம்பிக்கப்பட்ட தினசரி காமிக்ஸ் தொடரே பக் ரயான் ஆகும்.
இந்த பக் ரயான் தொடர் மிகவும் சிறப்பான வரவேற்ப்பு பெற்று இருபத்தி ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து டெய்லி மிரர் பத்திரிக்கையில் வந்து சாதனை புரிந்தது. முப்பதுகளின் முடிவிலும், நாற்பதுகளிலும் இங்கிலாந்தில் மிகவும் புகழ் பெற்ற பிரைவேட் ஐ என்ற தனியார் துப்பறியும் கதை வரிசையை சார்ந்து இந்த பக் ரயான் கதைகள். இந்த கதைகளை தமிழில் கொணர்ந்தது தனி கதை.
ராணி காமிக்ஸ் 1984 ஆம் ஆண்டு துவக்கப்பட்டபோது வாராந்தரி ராணி இதழில் இருந்த திரு ராமஜெயம் அவர்களை அழைத்து ராணி காமிக்ஸின் ஆசிரியராக பதிவி உயர்வு தந்தனர் (பின்னர் இதுவே ஒரு கோர்ட் கேஸ் ஆனது வேறு கதை). அவரும் ஜேம்ஸ் பான்ட் கதைகள், ப்லீட்வே நிறுவனத்தினரின் வெஸ்டர்ன் கதைகள் (செவ்விந்தியர், குதிரை வீரர் கதைகள்), சாகச கதைகள் என்று வெளியிட்டு கொண்டு இருந்தார். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கதைகளின் தட்டுப்பாடு ஏற்படவே டெய்லி மிரார் பத்திரிக்கையின் கதைகளை அசோசியேடட் பிரெஸ் மூலமாக தமிழில் கொணர்ந்தார். அப்படி வந்தவர்தான் பக் ரயான். ஆங்கில பெயரான பக் ரயான் என்பது அங்கே ஓக்கேதான். ஆனால் தமிழில் இந்த பெயர் உச்சரிக்க கடினமாக இருந்த காரணத்தினால் அப்போதைய ராணி காமிக்ஸ் எடிட்டர் திரு ராமஜெயம் அவர்கள் அந்த பெயரை துப்பறியும் சிங்கம் ராயன் என்று மாற்றினார். ராயன் தமிழில் வந்த முதல் கதை மயக்க ஊசி ஆகும்.
அழகிப்போட்டியில் ஜெயிக்கும் பெண்ணின் பரிசுப்பணத்தை அபகரிக்க நினைக்கும் கொடியவர்களின் கொட்டத்தை ராயன் அடக்குவது இந்த கதையின் சாராம்சம். தெளிவான சித்திரங்களும், அலட்டல் இல்லாத நடையும், நம்பும்படியாக இருக்கும் கதையோட்டமும் இந்த தொடரின் சிறப்பு அம்சங்கள்.
ராணி காமிக்ஸ் எகிப்திய மம்மி அட்டைப்படம் | முதல் ராயன் கதை - மயக்க ஊசி |
இந்த கதையின் வரவேற்ப்பை பற்றி சரிவர கணிக்க முடியவில்லை. ஏனென்றால் அட்டைப்படத்தில் வந்த எகிப்திய மம்மி என்ற கதை மிகவும் வித்தியாசமான கதையோட்டத்தை கொண்டிருந்த காரணத்தினால் புத்தகத்தின் வெற்றி முதல் கதைக்கா அல்லது இரண்டாவதாக வந்த மயக்க ஊசி கதைக்கா என்பது புரியாத புதிராக இருந்தது.
இரண்டாவதாக வந்த ராயன் கதை துப்பறியும் பெண் என்ற கதையாகும். இந்த கதையானது முழுநீள கதையாக (அதாவது புத்தகம் முழுவதும் வரும் ஒரே கதையாக) வெளிவந்தது. ஆனால் இந்த கதையிளும்கூட அட்டையில் ரயான் தோன்றவில்லை. அவரது உதவியாளரே வருகிறார். ஒரு விஞ்ஞானி, அவரின் உதவியாளர், மர்மமான நிகழ்வுகள், முக்கியமான முடிச்சுகள், துடிப்பான ஓட்டம் என்று கதை சுவாரஸ்யமாக நகருகிறது.
அட்டையில் ராயன் பெயர் கொண்ட முதல் கதை துப்பறியும் பெண் | ராணி காமிக்ஸில் வந்த இரண்டாவது ராயன் கதை |
மிகவும் கன்சர்வேடிவ் ஆக இருக்கும் தமிழ் காமிக்ஸ் உலகிற்கு இந்த அட்டைப்படம் ஒரு கிளு கிளு அனுபவத்தை அளித்தது. கிளிவேஜ் காட்டி வந்த முதல் அட்டைப்படம் இதுவாகவே இருக்கும். அதற்காகவே இந்த புத்தகம் அன்றைய விசிலடிச்சான் குஞ்சுகளால் மிகவும் ரசிக்கப்பட்டது (வழக்கமாக அனைத்து ஜேம்ஸ் பாண்ட் கதைகளும் இந்த அம்சதிற்காகவே ரசிக்கப்பட்டது என்று சொல்பவர்களும் உண்டு).
மூன்றாவதாக வந்த அட்டைப்படம் அதையும் தாண்டி ஒருபடி மேலே சென்று டூ பீஸ் லெவலில் கவர்ச்சி காட்டியது. கதையும் சற்று கிளுகிளுப்பாகவே நகரும். இந்த கதையில் ஒரு முக்கிய விஷயம் இருந்தது. அதாவது இது ஒரு குறிப்பிட்ட கதை வரிசையில் இரண்டாம் பாகம் ஆகும். ஆனால் முதலில் படிப்பவர்களுக்கு அந்த எண்ணமே தோன்றாமல் அதனை எடிட் செய்து திரு ராம ஜெயம் அவர்கள் அளித்த விதம் இன்றும் பலரை ஆச்சர்யப்பட வைக்கிறது.
ஜனாதிபதி கொலை அட்டைப்படம் - கவர்ச்சி கன்னிதான் அட்டையில் | திரு ராமஜெயம் அவர்களின் மேற்பார்வையில் கடைசி ராயன் கதை |
கதையோட்டம் இப்படி செல்லும்: இங்கிலாந்தில் இருக்கும் ரயான் ஒரு கொலை முயற்சியை தடுக்கிறார். கொல்லப்ப இருந்தவர் ஒரு நாட்டின் ஜனாதிபதி. அவரை சொந்த நாட்டிற்க்கு திரும்ப விடாமல் ஒரு கொலைகார கூட்டம் முயல்கிறது. அதன் தலைவன் ஒரு ராணுவ கேப்டன் (அப்பாடா, கதை தலைப்பு செட் ஆகிவிட்டது). ரயான் அவர்களின் முயற்சிகளை முறியடித்து அவர்களின் கண்களில் மண்ணை தூவி விட்டு அவரை சொந்த நாட்டிற்க்கு கொண்டு செல்வதே கொலைகார கேப்டன் என்ற முதல் பாகத்தின் கதை.
இரண்டாவது பாகத்தில் அந்த தீவில் ஜனாதிபதியின் ஆசை நாயகி (முன்னாள் காபரே ஆட்டக்காரி) ஆட்சியை அபகரிக்க செய்யும் சூழ்சிகளும், அதனை ரயான் அடக்கும் சாகசங்களுமே கதை. பிணத்தை ஐஸில் வைத்து பாதுகாப்பது, கொலைக்கருவியை மறைப்பது என்று கதை சற்று வேறுபட்டு நடக்கிறது.
முதன் முதலாக அட்டையில் ராயன் - கொலைகார கேப்டன் | ராயனின் கடைசி கதை கொலைகார கேப்டன் |
இதன் பின்னர் வேறெந்த ரயான் கதைகளும் ராணி காமிக்ஸில் வெளிவரவில்லை. ஜனாதிபதி கொலை கதை மற்றும் வண்ணத்தில் ரீபிரின்ட் செய்யப்பட்டது (மிகவும் மோசமான கதையமைப்புடன்). இதன் பின்னர் சுமார் பத்து வருடங்கள் ரயான் அவர்களின் கதை தமிழில் வரவில்லை. பின்னர் லயன் காமிக்ஸில் இந்த ஹீரோவே டிடெக்டிவ் ஜூலியன் என்ற பெயரில் வந்தபோது பழைய காமிக்ஸ் ரசிகர்கள் பலரும் மிகவும் சந்தோஷப்பட்டனர். ஒரு நல்ல கதை தொடர் மறுபடியும், வேறொரு காமிக்ஸ் இதழில் வேறொரு பெயரில் மிகவும் நல்ல தமிழாக்கத்துடன் வெளிவந்தால் யார்தான் சந்தோஷப்படமாட்டார்கள்?
டிடெக்டிவ் ஜூலியன் முதல் கதை லயன் காமிக்ஸில் | கார்ட்டூன் கொலைகள்-துப்பறியும்சிங்கம் ராயன் டிடெக்டிவ் ஜுலியனாக மாறினார் |
இந்த கால கட்டத்தில் பல ராணி காமிக்ஸ் ஹீரோக்களும், ஹீரோயின்களும் லயன் மற்றும் முத்து காமிக்ஸில் வெளிவந்தனர் மற்றும் வெளிவர இருந்தனர். (இதனைப்பற்றிய பதிவு விரைவில்). கார்ட்டூன் கொலைகள் ஒரு தொழில் முறை விரோதம் காரணமாக நிகழும் தொடர் கொலைகளை பற்றிய சுவையான கதை. மிகவும் ரசிக்கத்தக்க திருப்பங்களும், தெளிவான கதையோட்டமும் கொண்ட இந்த கதை உங்களை மிகவும் ரசிக்க வைக்கும் என்பதில் இருவேறு கருத்திருக்க இயலாது.
லயன் காமிக்ஸில் வந்த இரண்டாவது டிடெக்டிவ் ஜூலியன் கதை பரலோகப்பரிசு. இந்த கதை என்னை மிகவும் ரசிக்க வைத்த ஒன்றாகும். மொக்கையான கேள்விகளை கேட்டு அதனை ஒரு போட்டியாக வைத்து அதற்க்கு லட்சக்கணக்கில் பரிசுகளை வழங்குகிறது. இதன் பின்னர் இருக்கும் மர்மம் பற்றி விளங்காத மர்மத்தை விளக்கும் கதையாகும் இது. இதனைப்பற்றி வேறுதுவும் இப்போதைக்கு சொல்வதற்கில்லை. ஏன் என்பதை அடுத்த பேராவில் சொல்கிறேன்.
ராயன் - டிடெக்டிவ் ஜூலியன் - லயன் காமிக்ஸில் இரண்டாவது கதை | பரலோகப்பரிசு - ஒரு சிறந்த துப்பறியும் கதை |
மூன்றாவதாக வந்த கதை முத்து காமிக்ஸில் வந்தது. தலைப்பே மிகவும் வித்தியாசமானது. நொறுங்கிய நாணல் மர்மம் - சரிதானே? ஏன் இந்த கதைகளைப்பற்றி அதிகம் சொல்ல வில்லை என்றால் இந்த மூன்று புத்தகங்களும் தற்போது லயன் காமிக்ஸ் ஆபீசில் விற்பனைக்கு கிடைக்கின்றன. இந்த மூன்று புத்தகங்களையும் வாங்கி படித்து மகிழுங்கள். சுமார் அறுபது, எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ஒரு கோல்டன் ஒல்டி கதையை வெறும் ஐந்து ரூபாய்க்கும், பத்து ரூபாய்க்கும் படிக்கும் வாய்ப்பு உங்களுக்கு அவ்வளவு எளிதில் வாய்க்காது.
முத்து காமிக்ஸில் முதல் முறையாக ஜூலியன் வருகை | நொறுங்கிய நாணல் மர்மம் - லேட்டஸ்ட் கதை - தூள் கதை |
நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில் உடனடியாக இந்த தொலைபேசி எண்ணிற்கு போன் செய்யுங்கள்.
Phone Number: +91-4562 272649 (IST: 10.00 AM – 05.00 PM)
Mail ID: Lioncomics@yahoo.com
எனக்கு பக் ரயானை பற்றிய சிந்தனைகள் வரும்போதெல்லாம் உடனடியாக தோன்றும் மற்றுமொரு சிந்தனை இந்த படத்தை பற்றியதாகும். மால்டீஸ் பால்கன் என்ற இந்த படமானது காமிக்ஸ் ரசிகர்களுக்கு பிடிக்க பல காரணங்கள் இருந்தாலும் தலையாய காரணம்: இந்த படத்தின் கதையை எழுதியவர் நம்ம காமிக்ஸ் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயம் ஆன டஷீல் ஹாம்மெட் ஆகும். இந்த டஷீல் ஹம்மெட் தான் நம்ம பயங்கரவாதி டாக்டர் செவனின் பரம எதிரியாகிய சீக்ரெட் ஏஜன்ட் காரிகனை உருவாக்கியவர்.
லக்கி லுக் மற்றும் டெக்ஸ் வில்லர் கதைகளில் வரும் பிங்கர்டன் துப்பறியும் ஏஜென்சியில் சிறு வயதிலேயே (21) வேலைக்கு சேர்ந்து ஏழு வருடங்கள் பணி புரிந்தார் டஷீல் ஹாம்மெட். அந்த அனுபவத்தின் காரணமாகவே அவர் பல துப்பறியும் கதைகளை எழுதினர். அந்த நாவல்கள் பலவும் பின்னர் சினிமாவாகவும் உருப்பெற்றன. அவற்றில் மிகவும் போற்றப்படும் ஒன்றே மால்டீஸ் பால்கன் ஆகும்.
ஒரு பால்கன் சிலையில் பல கொடிகள் பெறுமானமுள்ள வைர வைடூரியங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகளாக அதனை ஒரு கும்பல் தேடி வருகிறது. பின்னர் பல ஆண்டுகள் அந்த பறவை சிலை காணாமல் போய் விடுகிறது. திடீரென்று அது திரும்பவும் வரும்போது அதனால் ஏற்படும் உயிர்ச்சேதங்களும், அதனை டிடெக்டிவ் சாம் ஸ்பேட் துப்பு துலக்கும் விதமும் அலாதியான ஒரு படம் பார்க்கும் அனுபவத்தை அளிக்கும். மறவாமல் பாருங்கள்.
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?
உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.
அடச்சே,
ReplyDeleteஜஸ்ட் மிஸ்ஸு.
மீ த செகண்டு.
நானும் படித்து விட்டு வருகிறேனே?
//நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?
ReplyDeleteஉங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?//
எல்லாம் சரிதான்! ஆனால் உள்மனம் ஏனோ உங்கள் ஆரம்ப கால பதிவுகளையே நாடுகிறது! I MISS THEM!
தலைவர்,
அ.கொ.தீ.க.
//மிகவும் கன்சர்வேடிவ் ஆக இருக்கும் தமிழ் காமிக்ஸ் உலகிற்கு இந்த அட்டைப்படம் ஒரு கிளு கிளு அனுபவத்தை அளித்தது. கிளிவேஜ் காட்டி வந்த முதல் அட்டைப்படம் இதுவாகவே இருக்கும்.//
ReplyDeleteராணிக் காமிக்ஸின் அழகியை தேடி?
டாக்டர் ஐயா..!
வைகோ கூடத்தான் கூட்டணிக்கு முதலில் வந்தார். கடைசியா வந்த கேப்டனுக்கு தானே 40 சீட் கிடைத்தது?
//ராணிக் காமிக்ஸின் அழகியை தேடி?//
ReplyDeleteநண்பரே, அட்டையில் க்ளிவேஜ் காட்டி வந்த முதல் அட்டைப்படம் என்றுதானே சொல்லி இருக்கிறார்? அழகியை தேடி அட்டையில் ஜேம்ஸ் பான்ட் மட்டுமே அல்லவா இருப்பார்?
பழைய கால துப்பறியும் கதைகளை படிப்பதே ஒரு அலாதி சுகம் தான். நீங்கள் சொன்னது போல் பரலோகப்பரிசு ஒரு அருமையான கதை தான்.
ReplyDeleteமற்றொடு உண்மை ராணி காமிக்ஸில் இருந்த அட்டைப்பட கிளுகிளுப்பு லயன் காமிக்ஸில் இல்லை
இது போல் அற்புதமான பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteஅன்புடன்,
லக்கி லிமட்
Chicken Run (2000)– கோழிகளின் எஸ்கேப்
அருமையான பதிவு. உங்கள் உழைப்பும் முனைப்பும் தெளிவாகத் தெரிகிறது நண்பரே. பாராட்டுகள், தொடரவும்!
ReplyDelete- என். சொக்கன்,
பெங்களூரு.
Wonderful post friend .It was quite interesting and informative . Bravo .Keep going .
ReplyDeleteவாவ் சூப்பர் :))
ReplyDelete//மிகவும் கன்சர்வேடிவ் ஆக இருக்கும் தமிழ் காமிக்ஸ் உலகிற்கு இந்த அட்டைப்படம் ஒரு கிளு கிளு அனுபவத்தை அளித்தது. கிளிவேஜ் காட்டி வந்த முதல் அட்டைப்படம் இதுவாகவே இருக்கும்.//
ReplyDeleteஅட்ரா சக்க
அட்ரா சக்க
அட்ரா ........... சக்க ......