பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.
வழக்கமாக தமிழ் காமிக்ஸ் உலகில் முன்னோட்டங்கள் என்றால் அது புத்தகம் குறித்தோ அல்லது வெளியீடு குறித்தோ இருக்கும். பலரும் வர இருக்கும் புத்தகங்களின் அட்டைகளை பற்றி பதிவிட்டு இருக்கிறார்கள். கிங் விஸ்வாவோ ஒரு படி மேலே போய் அடுத்து வர இருக்கும் புத்தகத்தின் ஹாட் லைனின் ஒரு பகுதியை பற்றி முன்னோட்டப்பதிவு இட்டு இருக்கிறார். ஆனால் இங்கு நாம் இடப்போகும் முன்னோட்டப்பதிவு சற்றே வித்தியாசமானது.
ஆம், காமிக்ஸ் நியூஸ் என்ற பெயரில் வழமையாக கிங் விஷ்வாவும், பயங்கரவாதி டாக்டர் செவனும் காமிக்ஸ் குறித்த செய்திகளை வெளியிடுவார்கள். அந்த வகையில் வரப்போகும் காமிக்ஸ் நியூஸ் குறித்த முன்னோட்ட பதிவு இது: ஆமாம், நாளை வர இருக்கும் ஆனந்த விகடன் இதழில் காமிக்ஸ் குறித்த ஒன்றல்ல, இரண்டு செய்திகள் வர இருக்கின்றன.
தகவல் ஒன்று: முத்து விசிறியின் காமிக்ஸ் வலைத்தளம் - விகடன் வரவேற்பறையில் வழமையாக விகடன் வரவேற்பறை பகுதியில் ஒரு வலைத்தளம், ஒரு புத்தகம், ஒரு குறுந்தகடு என்று பல நல்ல விஷயங்களை மக்களுக்கு அறிமுகம் செய்வார்கள். அந்த வகையில் விகடன் வரவேற்பறையில் இந்த வாரம் நம்முடைய தமிழ் காமிக்ஸ் உலகின் இணையதள மாமன்னர், ஈடிணையற்ற பேரரசர் திரு முத்துவிசிறி அவர்களின் தளம் குறித்து அறிமுகம் உள்ளது. இதோ அந்த அறிமுகம்:
கம்பியூட்டர் கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷனும் வந்த பிறகு காணாமல் போன பால்ய காலத்து சந்தோஷங்களில் ஒன்று காமிக்ஸ். இங்கு தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் ஸ்கான் செய்யப்பட்டு வலையேற்றப்பட்டு இருக்கின்றன. ஆங்கில காமிக்ஸ்களின் கதை சுருக்கமும் தரப்பட்டு இருக்கின்றது. காமிக்ஸ் புத்தகங்களின் சந்தை குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரை சுவாரஸ்யம். நினைவுகளில் புதைந்து போன ஸ்பைடர் (மேன்?!?), இரும்புக்கை மாயாவி இங்கு உலவிக்கொண்டு இருப்பது ஆச்சர்யம்.
என்ன, அவ்வளவு தூரம் சொல்லி இருந்தும் மக்களால் ஸ்பைடர் என்பது வேறு, ஸ்பைடர்மேன் என்பது வேறு என்பதை இன்னமும் தெரிந்துகொள்ளவில்லை. இருக்கட்டும்.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த முத்து விசிறி அவர்களின் வலைதளத்தை படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்: முத்து விசிறியின் முத்தான வலை தளம்.
தகவல் இரண்டு: விகடனின் மற்றுமொரு வித்தியாசமான பகுதி 16 பிளஸ். இந்த பகுதியில் பல சுய முன்னேற்ற கட்டுரைகள் உள்ளன. அவற்றில் ஒன்று நான் (சோ எண்டு சோ ) ஆனது எப்படி என்று ஒரு பிரபலம் தான் எப்படி பிரபலம் ஆனார் என்று கூறுவார். அப்படி இந்த வாரம் மைனா பட இயக்குனர் பிரபு சாலமன் தன்னுடைய வாழ்க்கையை பற்றி கூறுகையில் கீழ்க்காணும் வரிகள் வருகின்றன.
நான் பிரபு சாலமன் ஆனது எப்படி: "சின்ன வயசு நினைவுகளில் முத்து காமிக்ஸ் மட்டுமே பளிச்சுன்னு ஞாபகத்தில் இருக்கு. இரும்புக்கை மாயாவியின் சாகசங்கள் என்னை வேறு உலகத்தில் உலாவ செய்யும்" என்று ஆரம்பிக்கும் அந்த கட்டுரை அவரின் பால்ய காலத்து நினைவுகளில் ஆரம்பித்து அவரது சமீபத்து படமாகிய மைனா வரை வந்து முடிகிறது.
இப்படியாக இந்த மாதிரி காமிக்ஸ் விஷயங்களை அடிப்படையாக கொண்டு இரண்டு செய்திகளை தாங்கியவாறு ஆனந்த விகடன் நாளை கடைகளில் விற்பனைக்கு வருகிறது. படிக்க தவறாதீர்கள்.
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?
உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.