
பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்கிறேன். சென்ற பதிவானது பெருவாரியான மக்களையும், காமிக்ஸ் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது கண்கூடாக தெரிந்தது. ஆனால் அதே சமயம் ஒலக காமிக்ஸ் ரசிகரின் பழைய ஸ்டைல் பதிவுகள் வேண்டும் என்றும் பல்லாயிரக்கணக்கான வேண்டுகோள்கள் வந்த வண்ணம் இருக்கின்றன (ங்கொப்புரானே சத்தியமா). ஆகையால் இதோ பழைய பாணியில் ஒரு சிறப்பு பதிவு. இந்த பதிவானது இன்று பிறந்த நாள் கொண்டாடும் நம்ம காமிக்ஸ் உலகின் 'முடி' சூடிய மன்னராகிய கிங் விஸ்வாவிற்கு அர்ப்பணம்.
முத்து காமிக்ஸ் இதழ்களில் வெளிவந்த கதைகளில் இரும்புக்கை மாயாவிக்கு பிறகு மிகவும் புகழ் பெற்ற கதை வரிசை லாரன்ஸ் டேவிட் மற்றும் ஜானி நீரோ ஸ்டெல்லா ஆகும். அதுவும் ஜானி நீரோ மற்றும் ஸ்டெல்லா கதையில் வரும் கர்னல் ஜேக்கப் கதாபாத்திரம் மிகவும் சிறப்பு பெற்றது. அவர் ஜானி நீரோவை சந்திக்க வருவது, ஸ்டெல்லா அவர்களின் பேச்சை கேட்பது, ஸ்டெல்லாவை கழட்டி விட ஜானி நீரோ நினைப்பது, ஸ்டெல்லா எப்படியாவது ஜானி நீரோவுடன் ஒட்டிக்கொண்டு, பல சமயங்களில் ஜானி நீரோவை காப்பாற்றுவது என்று இந்த கதை சிறப்பாக செல்லும்.
அதைப்போலவே அகொதீக கழக சதிகளை முறியடிக்கும் இரட்டை உளவாளிகளான லாரன்ஸ் டேவிட்டையும் யாராலுமே மறக்க முடியாது. லாரன்ஸ் முழுக்க முழுக்க மூளை பலத்தையும், டேவிட் தன்னுடைய அசாத்திய உடல் வலுவையும் கொண்டு அகொதீக கழக கண்மணிகளை வெற்றி பெரும் விதமே தனி பாங்கு. இந்த இரண்டு விதமான கதை வரிசைகளும் ஒன்றாக ஒரே கதையில் வந்தால் எப்படி இருக்கும் என்ற ஒரு விபரீதமான சிந்தனையின் விளைவே இந்த பதிவு.
இந்த பதிவையும், இந்த முழு நீள காமிக்ஸ் கதையையும் படித்தது ரசிக்கும் முன்பு நீங்கள் நெடுநாள் முன்பு படித்த "தலை கேட்ட தங்க புதையல் (லாரன்ஸ் டேவிட் சாகசம்) + தங்க விரல் மர்மம் (ஜானி நீரோ சாகசம்)" ஆகிய இரண்டு கதைகளையும் சற்றே நினைவில் கொள்ளுங்கள். மிகவும் முக்கியம். அந்த இரண்டு கதைகளையும் நினைவில் கொண்டு வந்த பின்பு இந்த கதையை படிக்க செல்லுங்கள். அப்போதுதான் வசதி.
வரலாற்றின் பக்கங்களை கூர்ந்து படித்தவர்களுக்கு ஸ்பானிஷ் மன்னனாகிய ஹெர்னான் கோர்டஸ் படையெடுத்து அஸ்டெக் சாம்ராஜ்ஜியத்தை அழித்தது நினைவில் வரலாம். மேலும் விவரங்கள் அறிய இந்த இணைப்பில் படித்தது தெரிந்து கொள்ளுங்கள். இனிமேல் சற்றும் பொறுத்திராமல் உடனடியாக பொன்னர் சங்கர் படத்திற்கு போவோம், ச்சே பழக்க தோஷம். இனிமேல் சற்றும் பொறுத்திராமல் உடனடியாக பதிவிற்கு போவோம்.
பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா. முதல் பக்கம் - தலை கேட்ட தங்க புதையல் முதல் பக்கங்கள் |
முதல் கட்டங்களில் வெறும் கொள்ளையர்களாக இருந்தவர்கள் கடைசியில் திடீரென்று அஸ்டெக் கொள்ளையர்களாக மாறிவிடுவது ஒரு திருப்பம் என்றாலும்கூட வரலாற்றை படித்தவர்களுக்கு அது ஒரு கசப்பான விஷம் (விஷமே மோசம், அதில் கசப்பான விஷம் என்றால் என்ன என்பதை இந்த கதையை முழுவதுமாக படித்தது தெரிந்து கொள்ளுங்கள்).
பை தி வே, இந்த பக்கங்கள் எல்லாம் அப்படியே தலை கேட்ட தங்க புதையல் கதையின் ஆரம்ப பக்கங்கள் என்பதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லையென்றே கருதுகிறேன். For those who came in late, முத்து காமிக்ஸில் வந்த தலை கேட்ட தங்க புதையல் என்ற கதையின் ஆரம்ப காட்சிகளை இவர்கள் அப்படியே தழுவி வரைந்து இருக்கிறார்கள். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் - இன்னமும் கூட லயன் காமிக்ஸ் ஆபீசில் காமிக்ஸ் கிளாசிக்ஸ் வரிசையில் வந்த தலை கேட்ட தங்க புதையல் வெறும் பத்து ரூபாய்க்கே கிடைக்கிறது. இல்லாதவர்கள் வாங்கி படியுங்கள். (Phone Number to Contact Lion Comics Office: 04562-72649).
பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா - இரண்டாம் பக்கம் - தலை கேட்ட தங்க புதையல் |
மக்கா, வழக்கமாக காமிக்ஸ் புத்தகங்களில் கதைக்கேற்ப படம் வரைவார்கள். ஆனால் இங்கேயோ நிலைமை தலைகீழ். என்ன படம் மாடலுக்கு கிடைத்ததோ அதற்கேற்ப கதையின் போக்கை அமைத்திருக்கிறார்கள். இந்த பக்கத்தில் கடைசி இரண்டு கட்டங்களில் இருந்து தலை கேட்ட தங்க புதையல் கதையில் இருந்து நம்ம கதை உடனடியாக ஒரு யூ டர்ன் போட்டு தங்க விரல் மர்மம் (ஜானி நீரோ, ஸ்டெல்லா மற்றும் கர்னல் ஜேக்கப்) கதைக்கு மாறிவிடுகிறது. ஒரே ஒரு கொடுமை என்னவென்றால் கதை மறுபடியும் தலை கேட்ட தங்க புதையல் படங்களிற்கு மாறும்போது ஸ்டெல்லா கதாபாத்திரத்தை (கிரே) ஆபரேஷன் செய்து பெண்ணாக மாற்றியது போல டேவிட் செய்யும் சண்டைகளை எல்லாம் ஸ்டெல்லா (கிரே) செய்வது போல வைத்து ஆணுக்கு இங்கே பெண் சளைத்தவள் இல்லை என்ற பாரதியின் வாக்கை மெய்ப்பிக்க முயன்று இருக்கிறார்கள். அதற்கே அவர்களை பாராட்ட வேண்டும்.
பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா - பக்கம் 3 - தலை கேட்ட தங்க புதையல் |
கர்னல் ஜேக்கப் பாத்திரம் தன்னுடைய பாத்திரத்தின் பெயர் ஜேக்கம் என்று கூறுவதில் இருந்தே அவர்கள் இந்த கதையை தங்க விரல் மர்மம் கதாசிரியருக்கு டெடிகேட் செய்திருப்பதை உணரலாம். அதிலும் அவர் நான் மன்னர் கோர்டசின் கொள்ளு பேரன் என்று கூறி வரலாற்றையே நானூறு வருடங்கள் முன் நகர்த்துகிறார். (கொய்யால, இந்த கதையில கூடவா லாஜிக் பார்கிறீர்கள்? என்று நீங்கள் உச்சஸ்தாயியில் கத்துவது கேட்கிறது). சரி, ஒக்கே, அப்படியே விட்டு விடலாம்.
பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா – பக்கம் 4 - |
மெக்சிகோ வரைபடம் எல்லா கடைகளிலும் கிடைக்கும், அதுக்கு எதுக்கு இவர் அதனை தனியாக தரவேண்டும்? மெக்சிகோவில் என்ன பிரமிட்? இந்த நவநாகரீக உலகில் நகரை வரவேற்பது போல எதற்கு ஒரு பாழடைந்த நகரம்? என்றெல்லாம் நீங்கள் கேட்பதை நான் இனிமேலும் கண்டுகொள்ளவே போவதில்லை. நீங்களும் கதையை மட்டுமே ரசியுங்கள். பாஸ், ரஜினி படத்திற்கு எதுக்கு கதை மற்றும் லாஜிக்? கதையானது இப்போது மறுபடியும் தலை கேட்ட தங்க புதையல் காமிக்சிற்கு மாறுகிறது. லாரன்சும் டேவிட்டும் கர்னல் XYZன் பாசறையில் இருந்து தப்பிக்க முயல்கின்றவேளை இது.
பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா – பக்கம் 5 |
இந்த சீகுவேன்ஸ் எல்லாமே முத்து காமிக்ஸ் தலை கேட்ட தங்க புதையல் கதையில் வருபவை. லாரன்ஸ் டேவிட் இருவரும் கேப்டன் XYZன் மறைவிடத்தில் தப்பிக்க முயல்வதில் இருந்து இந்த நிகழ்வுகள் நடைபெறுவதை பழைய காமிக்ஸ் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதை கூட பொறுத்துக்கொள்ளலாம் பாஸ், ஆனால் டேவிட்டை இப்படி பெண் வடிவில் எப்படி பார்ப்பது என்று புகார் அளிக்க வேண்டாம். நிமிர்ந்த நன்நெஞ்சும், நேர் கொண்ட பார்வையும் கொண்ட பாரதியின் புதுமைப் பெண்ணாக டேவிட் விளங்குவது பெண்ணியவாதிகளுக்கு ஒரு வெற்றி.
பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா – பக்கம் 6 - |
ஓநாய்களை பந்தாடி விட்டு தடியர்களை பந்தாட நம் ஜோடி ரெடி ஆகிறது. சமீபத்தில் நண்பர் கிங் விஸ்வா இந்த பதிப்பகத்தாரை நேரில் சந்தித்தது விட்டு வந்தாராம் (இன்னமும் வீடியோ இன்டர்வியூ எடுக்கவில்லை). ஒரு வேளை இந்த காமிக்ஸின் எடிட்டர் பூவிழியின் வாசத்தில் என்று தன்னுடைய காமிக்ஸ் நினைவுகளை பற்றி எழுதும்போது இப்படி எழுதுவாரோ? = அலெக்ஸ் & கிரே ஜோடியானது சேவாக் & டோனி ஜோடியை போல அதிரடிகளை தொடர்ந்து தந்து கொண்டே இருந்ததால் ஆண்டுமலரில் அவர்களுக்கு எரிந்த மனிதன் என்ற கதையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது & எரிந்த மனிதன் சற்றும் சோடை போகவில்லை. 'பளிச்' வெற்றி பெற்றது.
பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா – பக்கம் 7 - |
கதை இப்போது தங்க விரல் மர்மம் காமிக்ஸ் கதைக்கு மூவ் ஆகிறது. இனிமேல் சற்று விறுவிறுப்பாக செல்லும். கதையும் நடுப்பகுதியை நெருங்கி விட்டது. ஆமாம், எட்டாம் பக்கம் வந்து விட்டது பாருங்கள். கதை மொத்தமே பதினாறு பக்கங்கள்(தான்).
பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா – பக்கம் 8 - |
மக்கள்ஸ், இனிமேல் நோ ரன்னிங் கமெண்ட்ரி. நீங்களே ஜாலியாக கதையை படியுங்கள். குறிப்பாக இந்த ஓவியங்களை ரசியுங்கள். அடுத்த எட்டு பக்கங்கள் இதோ உங்கள் மேலான பார்வைக்கு:
பூவிழி காமிக்ஸ் - எரிந்த மனிதன் - கதை & படம் ஐஸ்வர்யா – பக்கம் 9 To 16 - |
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சென்ற பதிவைப்போல சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா? இல்லை, இதுபோலவே நம்ம பழைய ஸ்டைலில் பல அறிய தமிழ் காமிக்ஸ்களை உங்கள் பார்வைக்கு வழங்கலாமா? நீங்கள் கூறுங்கள். முடிவெடுப்போம்.
உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.