Sunday, January 17, 2010

காமிக்ஸ் வேட்டைக்காரன்–ஐயாம் தி பேக்-பாகம் இரண்டு

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நீண்ட நெடு நாட்களுக்கு முன்னே நானும் ஒரு காமிக்ஸ் வலைப் பதிவன் என்று ஒரு நிலை இருந்தது.பின்னர் பணிச்சுமையும் வேறு சில சுமைகளும் என்னை இந்த வலையுலகம் வரவிடாமல் தவிர்த்தன. இதோ, நான் வந்து விட்டேன் என்று கூறி பயங்கரவாதி டாக்டர் செவனின் வேட்டைக்காரி பதிவுக்கு பதில் சொல்லும் விதத்தில் நானும் ஒரு வேட்டைக்காரன் பதிவினை இட்டேன். வழக்கம் போல அந்த பதிவும் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.

ஆனால், நம்முடைய நெடுநாள் நண்பர்கள் பலரும் (கனவுகளின் காதலன் உட்பட) நம்முடைய பழைய பாணிக்கு திரும்பி அற்புதமான காமிக்ஸ்களின் அறிமுகங்களை அளிக்குமாறு வேண்டிக்கொண்டதன் விளைவாக இந்த பதிவினை இங்கே இடுகிறோம். சமீப காலங்களில் (இரண்டு ஆண்டுகள்) நான் மருத்துவர் விஜய் அவர்களை போல "வேட்டை ஆரம்பமாயிடுச்சு டோய்" என்று கூறியவாறே என்னுடைய கர்ச்சிப்பை எடுத்து தொடையில் கட்டிக்கொண்டு (ஏன்? எதற்கு? என்ற கருமாந்திரம் புடிச்ச கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, ஆமாம்) தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் இருக்கும் புத்தக கடைகளில் எல்லாம் அடித்து புடித்து புத்தக வேட்டையில் இறங்கினேன். அதன் விளைவை இந்த பதிவில் பாருங்கள். சென்ற பதிவில் சாதாரணமான சில பல புத்தகங்களை பற்றி கூறி படம் பிடித்து காட்டி இருந்தேன்.

இந்த பதிவில் தமிழ்நாட்டின் கலைப்பொக்கிஷங்களை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.முதலில் நாம் காண இருப்பது சென்னையில் இருந்து வெளிவந்த வாசு காமிக்ஸ் பற்றி. இந்த காமிக்ஸ் புத்தகம் முத்து காமிக்ஸ் எப்படி ஆங்கில முதல் எழுத்தை (M) லோகோவாக கொண்டதோ, அதனைப் போலவே வாசு என்பதன் முதல் எழுத்தை (V) லோகோவாக கொண்டு செயல்பட்டது. மாதம் ஒரு புத்தகம் என்ற முறையில் வெளிவந்த இந்த அற்புத கதை வரிசையில் ஏற்கனவே நாம் ஒரு கதையை படித்து மகிழ்ந்து இருக்கிறோம். ஆம், மாயாவியும் மந்திரவாதியும் என்ற அந்த அற்புத கதை பொக்கிஷத்தை உங்களால் மறக்க இயலுமா?

கடைசி வரிசை திரு ராம நாராயணன் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. ஆம், மாயக் குரங்கு, மாயப் பூனை, மாயக் கழுகு என்று ஒரே மாய + பிராணிகள் வரிசையாக கொண்டதாக இருக்கிறது. சில கதைகளின் பெயர்களே ஆவலை தூண்டுகின்றன. குறிப்பாக

 • நாக் அவுட் மன்னன் புல்லட் (எதிரிகளை நாக் அவுட் செய்யும் ஒரு பயங்கர வில்லனின் கதை)
 • காங்கோவில் பயங்கரம் (உள்நாட்டு கலவரத்தை அடக்கும் சிறப்பு புரட்சி கதை)
 • இரும்புக்கை எடிசன் (தாமஸ் ஆல்வா எடிசன் இரும்புக் கைமாயாவி ஆகி விடும் கதை)
 • மலைவாசலில் மாயாவி (இரும்புக்கை மாயாவி ராணுவத்தில் சேர்ந்து எல்லையில் போர் புரிகிறார்)
 • விந்தை மனிதர்கள் (லயன் காமிக்ஸ் கபாலர் கழகம் அட்டை நினைவுக்கு வருகிறதா?)
 • கோமாளியின் கொலைகள் (முத்து காமிக்ஸ் கொலைகார கோமாளி நினைவுக்கு வருகிறதா?)
 • பயங்கர கடத்தல் மன்னன் (அடுத்து வரப்போகும் முத்து காமிக்ஸ் அட்டை நினைவுக்கு வருகிறதா?)

Vasu Comics 80s Collection 21 Books

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அடுத்ததாக நாம் காணவிருப்பது மதுரையிலிருந்து வெளிவந்த (வந்து கொண்டிருக்கும்? வரப்போகும்?) கலைப்பொன்னி குழுமத்தின் பொன்னி காமிக்ஸ் ஆகும். மாயாவி என்ற பெயரை அட்டையில் இட்டாலே புத்தகத்தின் விற்பனை உறுதி என்பது எண்பதுகளில் தமிழகத்தில் எழுதப்படாத விதி. அதனால் பொன்னி காமிக்ஸில் பலவிதமான மாயாவிகளின் கதைகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. 

 • ஆவிகளுடன் மாயாவி (மந்திர வித்தைகளில் கைதேர்ந்த வித்தகனுடன் போரிடும் மாயாவி)
 • கடத்தல் மாயாவி (பெண்களை கடத்தும் ஒரு வைரியுடன் மாயாவியின் மோதல்)
 • பனித்தீவில் மாயாவி (மாயாவியின் டேர்டெவில் சாகசங்கள் நிறைந்தது)
 • மந்திரஜால மாயாவி (மாயாவி முப்பது நாட்களில் மந்திரம் கற்று ஒரு மோசக்காரனுடன் மோதுகிறார்)
 • மெக்சிகோ மாயாவி (ஏர்போர்ட்டில் முப்பது நாட்களில் மெக்சிகோ பாஷை கற்பது எப்படி என்ற புத்தகத்தை எதிரிகள் கடத்திவிட, மொழி தெரியாத எதிரிகளுடன் மாயாவி மோதும் மயிர்கூச்செறியும் சாகசம்) 

மாயாவிக்கு அடுத்தபடியாக கதையின் தலைப்பில் அதிகம் இடம்பெற்ற பெயர் ஒற்றன் ஆகும். இதோ ஒற்று வேலையை மையமாக வந்த சிலபல கதைகள்:

 • நீர்மூழ்கி ஒற்றன் (தண்ணீருக்கு அடியில் தண்ணீர் அடித்துக் கொண்டே இருக்கும் ஒரு ஒற்றனின் கதை)
 • சீனத்து ஒற்றன் (கூட இருந்தே குழி பறிக்கும் ஒரு உளவாளியின் கதை)
 • ராணுவ ஒற்றன் (ராணுவத்தில் சேர்ந்த மாயாவியின் உளவு சாகசங்கள்)
 • ரகசிய ஒற்றன் (காமன் மேன் ஆக இருக்கும் - அட, கமல் இல்லேங்க- ஒரு ஒற்றனின் கதை)
 • சுக்கிர மண்டல ஒற்றன் (விண்வெளியில் நடக்கும் உளவுவேலைகளை  அம்பலமாக்கும் கதை)

இதனை தவிர தமிழ் நாட்டினை மைய்யமாக கொண்ட பலவிதமான பிரத்யேக கதைகளும் பொன்னியில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

 • சிவப்பு ராணுவம் (இடதுசாரி மற்றும் வலதுசாரி கம்யுனிஸ கொள்கைகளை பரப்பிய கதை)
 • காட்டு மனிதன் (முப்பது நாளில் டார்ஜான் ஆவது எப்படி என்பதை விளக்கும் கதை)
 • பயங்கர பனாரா (திருமணம் ஆன பெண்களை கடத்தும் பனாராவின் கொள்கை விளக்க குறிப்பேடு)
 • ரகசிய ஏஜென்ட் 005  (நம்ம ஜேம்ஸ்பான்ட் 007 அவர்களின் அண்ணன் மகன் சாகசங்கள்) 

Ponni Comics 80s Collection 18 Books 

அடுத்ததாக நாம் காணவிருப்பது சிலபல காம்கிச்களின் தொகுப்புகள். குறிப்பாக அணு காமிக்ஸ், மலர் காமிக்ஸ், காக்ஸ்டன் காமிக்ஸ், சோலை காமிக்ஸ் என்று பல காமிக்ஸ்கள் வந்தன. அவற்றின் அட்டைப்படங்கள் எல்லாம் கண்ணை பறிக்கும் வண்ணம் இருந்தன என்பது குறிப்பிட தக்கது. அந்த வரிசையில் வந்த சில புகழ்பெற்ற கதைகள்:

 • ஏர்போர்ட்டில் மாயாவி (பாஸ்போர்ட்டை எதிரிகளிடம் பறிகொடுத்த மாயாவியின் நிலை என்ன?)
 • மாயாவி ஐ.பி.எஸ்.(ஐ.ஏ.எஸ் படிக்க ஆசைப்படும் மாயாவி BC கோட்டாவில் ஐ.பி.எஸ் ஆகிறார்)
 • உலகம் சுற்றும் மாயாவி (எம்ஜியாரின் படத்தின் இரண்டாம் பாகம் - திரைக்கதை அமரர் எம்ஜியார்)
 • விஷபல் மாயாவி (எதிரிகள் மாயாவியின் டூத் பிரஷ்ஷை ஒளித்து வைக்க,பல் விளக்க முடியாத மாயாவியின் நிலை என்ன?)

Assorted Comics 80s 90s 17 Books

இவை மட்டுமல்ல, கிடைக்கவே கிடைக்காது என்று இந்த காமிக்ஸ் வியாபார முதலைகள் சத்தியம் செய்யும் பல புத்தகங்கள் அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும்.இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் பாடம் என்னவென்றால் விடா முயற்சியுடன் பொறுமையும் காத்து இருந்தால், சரியான வழியில் நேர்மையாக முயன்றால் நம்மால் குறைந்த விலையில் நிறைந்த காமிக்ஸ் இன்பம் (சிற்றின்பம், பேரின்பம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது) காண முடியும் என்பதே.

தயவு செய்து யாரும் இந்த காமிக்ஸ்களை விலைக்கோ, இனாமாகவோ, அன்பளிப்பாகவோ, எக்ஸ்சேஞ்சுக்கோ கேட்டு பின்னூட்டங்களோ, மின்னஞ்சலோ அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள். என்னுடைய முகவரியை / தொலைபேசி எண்ணை/ கைபேசி எண்ணை என்னுடைய நண்பர்களிடம் கேட்பதும் வீண்.

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்

Related Posts with Thumbnails