Showing posts with label Vasu Comics. Show all posts
Showing posts with label Vasu Comics. Show all posts

Wednesday, April 7, 2010

உலக சுகாதார நாள் - தமிழ் காமிக்ஸ் உலகில் டாக்டர்கள்

பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். இன்று உலக சுகாதார நாள் ஆகும். உலக சுகாதார நாள் (World Health Day) என்பது உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக சுகாதார நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஓர் முக்கியமான உலக சுகாதார அமைப்பின் முக்கியமான சுகாதாரம் சம்பந்தமான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

இந்த நன்னாளில் நமது காமிக்ஸ் உலகில் இதுவரை டாக்டர்களை மைய்யமாக கொண்டு வந்த காமிக்ஸ்களை பற்றி அலசவே இந்த பதிவு. தமிழ் காமிக்ஸ் உலகம் என்றாலே திறமையான ஆங்கில பதிவர்கள் மட்டுமே (முதன் முதலில் முத்துவிசிறி & பின்னர் கிங் விஸ்வா) என்று இருந்த நிலையை மாற்றி தமிழிலும் சிறந்த காமிக்ஸ் தளங்களை இயக்க முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர் நமது காமிக்ஸ் டாக்டர் செவன். அவருக்கு இந்த பதிவுகளை சமர்ப்பணம் செய்கிறேன். நன்றி டாக்டர். உங்களால் தான் பலரும் தமிழில் காமிக்ஸ் வலைப்பதிவுகளை ஆரம்பித்தனர் என்பது கண்கூடான உண்மை. அவர்கள் அனைவரின் சார்பிலும் நன்றி.

அடுத்தபடியாக நான் நன்றி சொல்லும் இன்னொரு நபர் பழனி (எங்க சொந்த ஊர்) திருதலதினை சேர்ந்த டாக்டர் சுரேSH அவர்கள். யார் ஒருவர் காமிக்ஸ் பற்றிய பதிவினை இட்டாலும் வந்து அவர்களை பாராட்டும் ஒரு சிறப்பான மனிதர். வாழ்க அவர். வளர்க அவரின் கனவுகள்.

முத்து காமிக்ஸ் - சீக்ரெட் எஜன்ட் காரிகன் கதை - பயங்கரவாதி டாக்டர் செவன் - ஒரு கிளாசிக் சாகசக் கதை
Bayangaravaadhi Dr 7

நம்முடைய காமிக்ஸ் டாக்டர் முதன்முதலில் பதிவுலகில் அடியெடுத்து வைத்தபோது இந்த பதிவுடந்தான் வந்தார். ஆனால் அந்த பதிவில் இந்த கதையை பற்றி எதுவுமே சொல்லவில்லை என்பது ஒரு கொடிய உண்மை. ஆனால், அந்த பதிவின் தலைப்புக்கு நியாயம் செய்யும் விதமாகவே அந்த பதிவு இருந்தது என்பது மறுக்க இயலாத உண்மை.

லயன் காமிக்ஸ் - சூப்பர் ஸ்டார் ஸ்பைடர் சாகசம் - டாக்டர் டக்கர் - ஒரு அமானுஷ்ய வில்லனுடன் மோதல்
Lion004DoctorTakkar2

நம்முடைய லயன் காமிக்ஸில் வந்த மறக்க முடியாத ஸ்பைடர் கதை இது. இன்னமும் எனக்கு இந்த கதையை முதன்முதலில் படித்த நினைவு உள்ளது. பள்ளியில் ஸ்கூல் பையில் வைத்து தான் இந்த கதையை படித்தேன். புத்தகம் வரும்போது அல்ல, வந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு தான் 1989-இந்த புத்தகம் எனக்கு ஒரு பழைய புத்தககடையில் கிடைத்தது. அதனால் மதிய உணவு இடைவேளையில் இந்த கதையின் ஆரம்ப பக்கங்களை படித்தேன். மதிய உணவு இடைவெளி முடிந்தவுடன் முதல் வகுப்பு புவனேஸ்வரி மேடம் அவர்களின் வகுப்பு. அதனால் தைரியமாக கதையை படித்து முடித்தேன்.

ராணி காமிக்ஸ் - ராமஜெயம் அவர்களின் வெளியீடு – 007 ஜேம்ஸ் பாண்ட் சாகசம் - டாக்டர் நோ

RaniComics019Dr.No2

ராணி காமிக்ஸில் மறக்க முடியாத கதை இது. ஒரு கட்டத்தில் ஜேம்ஸ் பாண்ட் (கடைசியில்) தப்பிக்கும்போது மிகவும் தளர்ந்து விடுவார். அப்போதுகூட அவர் "ஜேம்ஸ் கண்ணா, மேலே நீந்தி போ" என்று நகைச்சுவையாக தன்னைத்தானே தேற்றிக்கொள்வார். மறக்கமுடியாத கட்டம் அது. சமீபத்தில் டாக்டர் செவன் இது தொடர்பான பதிவினை வெளியிட்டார். பதிவை படிக்க இங்கே கிளிக்கவும்.

லயன் காமிக்ஸ் - கராத்தே டாக்டர் – W.H.O டாக்டர் ஜஸ்டிஸ் - உலக சுகாதார நாள் சிறப்பு அட்டை படம்
Lion Comics Issue 41 Dated September 1986 Dr Justice Front Cover

இந்த அட்டைப்படதிர்க்கும் கதைக்கும் சம்பந்தமில்லை. இந்த அட்டைப்படம் இந்த புத்தகத்தில் வந்த ஒரு அற்புதமான கதையை மைய்யமாக கொண்டது. அந்த கதையின் தலைப்பு சூப்பர் மென். உங்களில் யாருக்கேனும் நினைவிருக்கிறதா? அது சரி, இந்த கதையை சென்ற ஆண்டே சிறப்பு பதிவாக இடுவதாக சொன்ன ஸ்ட்ராபெர்ரி சோம்பேறி விஸ்வா எங்கே?

லயன் காமிக்ஸ் - ஹாலிடே சூப்பர் ஸ்பெஷல் - மீண்டும் டாக்டர் செவன் - காரிகன் சாகசம்

Lion#083 - Holiday Super Special - BackLion Comics Phil Corrigan Agent X9 Issue No 83 Lion Holiday Sper Special Meendum Dr 7

இங்கிலாந்தில் இருந்து வந்த ஜேம்ஸ் பாண்ட் கதைகளுக்கு போட்டியாக அறுபதுகளில் வந்தவை காரிகன் கதைகள் (அதற்க்கு முன்னரே ஆரம்பித்தாலும், இந்த சமயத்தில் தான் இவை புகழ் பெற்றன). காரிகன் கதைகள் என்றாலே ஒரு சிறப்பு அம்சம் தரமான வில்லன்கள். குறிப்பாக டாக்டர் செவன். காமிக்ஸ் உலகின் தலைசிறந்த வில்லன்களில் முதன்மை இடத்திற்கு போட்டியிடுபவர் டாக்டர் செவன். அவரின் கதைகளில் சிறந்த கதை இது.

காமிக்ஸ் கிளாசிக்ஸ் - ஸ்பைடர் - மறுபதிப்பு -டாக்டர் டக்கர் - நல்ல அட்டைப்படம்?

CC 01-21

ஏற்கனவே இந்த கதையை பற்றி சொல்லிவிட்டதால் ஒரே ஒரு கம்ப்ளைன்ட் மட்டும்: ஏம்பா, ரெண்டு வருஷத்திற்கு முன்பே இந்த ஸ்பைடர் பற்றிய பதிவிடுவதாக சொன்ன சோம்பேறி எங்கே?

வாசு காமிக்ஸ் - ஒரிஜினல் தமிழ் காமிக்ஸ் - டாக்டரின் ஆவி - ஆஸ்கர் விருது பெற்ற படம் இந்த கதையில் இருந்து சுடப்பட்டது. 

Doctarin Aaavi

இந்த கதையை பற்றி நாம் ஏற்கனவே அலசி ஆராய்ந்து விட்டதால் புதிதாக சொல்ல எதுவும் இல்லை. புதிய வாசகர்கள் இந்த சுட்டியை பயன்படுத்தி நம்முடைய பழைய பதிவினை படிக்கவும். இந்த அட்டைப்படத்தை வரைந்த ஓவியர் G.K.மூர்த்தி அவர்களை பற்றி தீவிர ஆராய்ச்சி நடந்து வருகிறது. விரைவில் ஓவியர்களை பற்றிய ஒரு பதிவினை இட நான் உத்தேசித்து உள்ளேன்.

மாலைமதி காமிக்ஸ் AFI - ரகசிய எஜன்ட் காரிகன் - நம்பிக்கை துரோகி டாக்டர் செவன்

Corrigan Nambikkai Thurogi Doctor Seven

படத்தினை நண்பருக்கு மின் அஞ்சலில் அனுப்பி வைத்த உயர்திரு முது விசிறி அவர்களுக்கு நன்றி. படத்தை அனுப்ப மறுத்த டாக்டர் செவனுக்கு கண்டனம். வேறென்ன சொல்ல? இந்த பதிவில் இந்த அட்டைப்படத்தினை போட்டால் அவருடைய இமேஜ் பாதிக்கப்படுமாம். என்ன கொடுமை சார் இது?

நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா?

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Sunday, January 17, 2010

காமிக்ஸ் வேட்டைக்காரன்–ஐயாம் தி பேக்-பாகம் இரண்டு

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நீண்ட நெடு நாட்களுக்கு முன்னே நானும் ஒரு காமிக்ஸ் வலைப் பதிவன் என்று ஒரு நிலை இருந்தது.பின்னர் பணிச்சுமையும் வேறு சில சுமைகளும் என்னை இந்த வலையுலகம் வரவிடாமல் தவிர்த்தன. இதோ, நான் வந்து விட்டேன் என்று கூறி பயங்கரவாதி டாக்டர் செவனின் வேட்டைக்காரி பதிவுக்கு பதில் சொல்லும் விதத்தில் நானும் ஒரு வேட்டைக்காரன் பதிவினை இட்டேன். வழக்கம் போல அந்த பதிவும் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.

ஆனால், நம்முடைய நெடுநாள் நண்பர்கள் பலரும் (கனவுகளின் காதலன் உட்பட) நம்முடைய பழைய பாணிக்கு திரும்பி அற்புதமான காமிக்ஸ்களின் அறிமுகங்களை அளிக்குமாறு வேண்டிக்கொண்டதன் விளைவாக இந்த பதிவினை இங்கே இடுகிறோம். சமீப காலங்களில் (இரண்டு ஆண்டுகள்) நான் மருத்துவர் விஜய் அவர்களை போல "வேட்டை ஆரம்பமாயிடுச்சு டோய்" என்று கூறியவாறே என்னுடைய கர்ச்சிப்பை எடுத்து தொடையில் கட்டிக்கொண்டு (ஏன்? எதற்கு? என்ற கருமாந்திரம் புடிச்ச கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது, ஆமாம்) தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளில் இருக்கும் புத்தக கடைகளில் எல்லாம் அடித்து புடித்து புத்தக வேட்டையில் இறங்கினேன். அதன் விளைவை இந்த பதிவில் பாருங்கள். சென்ற பதிவில் சாதாரணமான சில பல புத்தகங்களை பற்றி கூறி படம் பிடித்து காட்டி இருந்தேன்.

இந்த பதிவில் தமிழ்நாட்டின் கலைப்பொக்கிஷங்களை உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்.முதலில் நாம் காண இருப்பது சென்னையில் இருந்து வெளிவந்த வாசு காமிக்ஸ் பற்றி. இந்த காமிக்ஸ் புத்தகம் முத்து காமிக்ஸ் எப்படி ஆங்கில முதல் எழுத்தை (M) லோகோவாக கொண்டதோ, அதனைப் போலவே வாசு என்பதன் முதல் எழுத்தை (V) லோகோவாக கொண்டு செயல்பட்டது. மாதம் ஒரு புத்தகம் என்ற முறையில் வெளிவந்த இந்த அற்புத கதை வரிசையில் ஏற்கனவே நாம் ஒரு கதையை படித்து மகிழ்ந்து இருக்கிறோம். ஆம், மாயாவியும் மந்திரவாதியும் என்ற அந்த அற்புத கதை பொக்கிஷத்தை உங்களால் மறக்க இயலுமா?

கடைசி வரிசை திரு ராம நாராயணன் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. ஆம், மாயக் குரங்கு, மாயப் பூனை, மாயக் கழுகு என்று ஒரே மாய + பிராணிகள் வரிசையாக கொண்டதாக இருக்கிறது. சில கதைகளின் பெயர்களே ஆவலை தூண்டுகின்றன. குறிப்பாக

  • நாக் அவுட் மன்னன் புல்லட் (எதிரிகளை நாக் அவுட் செய்யும் ஒரு பயங்கர வில்லனின் கதை)
  • காங்கோவில் பயங்கரம் (உள்நாட்டு கலவரத்தை அடக்கும் சிறப்பு புரட்சி கதை)
  • இரும்புக்கை எடிசன் (தாமஸ் ஆல்வா எடிசன் இரும்புக் கைமாயாவி ஆகி விடும் கதை)
  • மலைவாசலில் மாயாவி (இரும்புக்கை மாயாவி ராணுவத்தில் சேர்ந்து எல்லையில் போர் புரிகிறார்)
  • விந்தை மனிதர்கள் (லயன் காமிக்ஸ் கபாலர் கழகம் அட்டை நினைவுக்கு வருகிறதா?)
  • கோமாளியின் கொலைகள் (முத்து காமிக்ஸ் கொலைகார கோமாளி நினைவுக்கு வருகிறதா?)
  • பயங்கர கடத்தல் மன்னன் (அடுத்து வரப்போகும் முத்து காமிக்ஸ் அட்டை நினைவுக்கு வருகிறதா?)

Vasu Comics 80s Collection 21 Books

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அடுத்ததாக நாம் காணவிருப்பது மதுரையிலிருந்து வெளிவந்த (வந்து கொண்டிருக்கும்? வரப்போகும்?) கலைப்பொன்னி குழுமத்தின் பொன்னி காமிக்ஸ் ஆகும். மாயாவி என்ற பெயரை அட்டையில் இட்டாலே புத்தகத்தின் விற்பனை உறுதி என்பது எண்பதுகளில் தமிழகத்தில் எழுதப்படாத விதி. அதனால் பொன்னி காமிக்ஸில் பலவிதமான மாயாவிகளின் கதைகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. 

  • ஆவிகளுடன் மாயாவி (மந்திர வித்தைகளில் கைதேர்ந்த வித்தகனுடன் போரிடும் மாயாவி)
  • கடத்தல் மாயாவி (பெண்களை கடத்தும் ஒரு வைரியுடன் மாயாவியின் மோதல்)
  • பனித்தீவில் மாயாவி (மாயாவியின் டேர்டெவில் சாகசங்கள் நிறைந்தது)
  • மந்திரஜால மாயாவி (மாயாவி முப்பது நாட்களில் மந்திரம் கற்று ஒரு மோசக்காரனுடன் மோதுகிறார்)
  • மெக்சிகோ மாயாவி (ஏர்போர்ட்டில் முப்பது நாட்களில் மெக்சிகோ பாஷை கற்பது எப்படி என்ற புத்தகத்தை எதிரிகள் கடத்திவிட, மொழி தெரியாத எதிரிகளுடன் மாயாவி மோதும் மயிர்கூச்செறியும் சாகசம்) 

மாயாவிக்கு அடுத்தபடியாக கதையின் தலைப்பில் அதிகம் இடம்பெற்ற பெயர் ஒற்றன் ஆகும். இதோ ஒற்று வேலையை மையமாக வந்த சிலபல கதைகள்:

  • நீர்மூழ்கி ஒற்றன் (தண்ணீருக்கு அடியில் தண்ணீர் அடித்துக் கொண்டே இருக்கும் ஒரு ஒற்றனின் கதை)
  • சீனத்து ஒற்றன் (கூட இருந்தே குழி பறிக்கும் ஒரு உளவாளியின் கதை)
  • ராணுவ ஒற்றன் (ராணுவத்தில் சேர்ந்த மாயாவியின் உளவு சாகசங்கள்)
  • ரகசிய ஒற்றன் (காமன் மேன் ஆக இருக்கும் - அட, கமல் இல்லேங்க- ஒரு ஒற்றனின் கதை)
  • சுக்கிர மண்டல ஒற்றன் (விண்வெளியில் நடக்கும் உளவுவேலைகளை  அம்பலமாக்கும் கதை)

இதனை தவிர தமிழ் நாட்டினை மைய்யமாக கொண்ட பலவிதமான பிரத்யேக கதைகளும் பொன்னியில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

  • சிவப்பு ராணுவம் (இடதுசாரி மற்றும் வலதுசாரி கம்யுனிஸ கொள்கைகளை பரப்பிய கதை)
  • காட்டு மனிதன் (முப்பது நாளில் டார்ஜான் ஆவது எப்படி என்பதை விளக்கும் கதை)
  • பயங்கர பனாரா (திருமணம் ஆன பெண்களை கடத்தும் பனாராவின் கொள்கை விளக்க குறிப்பேடு)
  • ரகசிய ஏஜென்ட் 005  (நம்ம ஜேம்ஸ்பான்ட் 007 அவர்களின் அண்ணன் மகன் சாகசங்கள்) 

Ponni Comics 80s Collection 18 Books 

அடுத்ததாக நாம் காணவிருப்பது சிலபல காம்கிச்களின் தொகுப்புகள். குறிப்பாக அணு காமிக்ஸ், மலர் காமிக்ஸ், காக்ஸ்டன் காமிக்ஸ், சோலை காமிக்ஸ் என்று பல காமிக்ஸ்கள் வந்தன. அவற்றின் அட்டைப்படங்கள் எல்லாம் கண்ணை பறிக்கும் வண்ணம் இருந்தன என்பது குறிப்பிட தக்கது. அந்த வரிசையில் வந்த சில புகழ்பெற்ற கதைகள்:

  • ஏர்போர்ட்டில் மாயாவி (பாஸ்போர்ட்டை எதிரிகளிடம் பறிகொடுத்த மாயாவியின் நிலை என்ன?)
  • மாயாவி ஐ.பி.எஸ்.(ஐ.ஏ.எஸ் படிக்க ஆசைப்படும் மாயாவி BC கோட்டாவில் ஐ.பி.எஸ் ஆகிறார்)
  • உலகம் சுற்றும் மாயாவி (எம்ஜியாரின் படத்தின் இரண்டாம் பாகம் - திரைக்கதை அமரர் எம்ஜியார்)
  • விஷபல் மாயாவி (எதிரிகள் மாயாவியின் டூத் பிரஷ்ஷை ஒளித்து வைக்க,பல் விளக்க முடியாத மாயாவியின் நிலை என்ன?)

Assorted Comics 80s 90s 17 Books

இவை மட்டுமல்ல, கிடைக்கவே கிடைக்காது என்று இந்த காமிக்ஸ் வியாபார முதலைகள் சத்தியம் செய்யும் பல புத்தகங்கள் அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும்.இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளும் பாடம் என்னவென்றால் விடா முயற்சியுடன் பொறுமையும் காத்து இருந்தால், சரியான வழியில் நேர்மையாக முயன்றால் நம்மால் குறைந்த விலையில் நிறைந்த காமிக்ஸ் இன்பம் (சிற்றின்பம், பேரின்பம் எல்லாவற்றையும் விட உயர்ந்தது) காண முடியும் என்பதே.

தயவு செய்து யாரும் இந்த காமிக்ஸ்களை விலைக்கோ, இனாமாகவோ, அன்பளிப்பாகவோ, எக்ஸ்சேஞ்சுக்கோ கேட்டு பின்னூட்டங்களோ, மின்னஞ்சலோ அனுப்ப வேண்டாம் என்று கேட்டு கொள்ள படுகிறார்கள். என்னுடைய முகவரியை / தொலைபேசி எண்ணை/ கைபேசி எண்ணை என்னுடைய நண்பர்களிடம் கேட்பதும் வீண்.

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன், 
ஒலக காமிக்ஸ் ரசிகன்

Wednesday, June 3, 2009

டாக்டரின் ஆவி - The Aavi of the Doctor

 

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். நீண்ட நெடு நாட்களுக்கு முன்னே நானும் ஒரு காமிக்ஸ் வலைப் பதிவன் என்று ஒரு நிலை இருந்தது. பின்னர் பணிச்சுமையும் வேறு சில சுமைகளும் என்னை இந்த வலையுலகம் வரவிடாமல் தவிர்த்தன. இதோ, நான் வந்து விட்டேன்.

ஆனால், இது ஒரு குழப்பமான பதிவு. இந்த பதிவின் கேள்விகளுக்கு விடை ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி தான் தெரியும். அது என்ன ஜூன் ஒன்பது என்று கேள்வி கேட்கும் நபர்களுக்கு, பிடி சாபம் - உங்கள் கனவில் நமீதா முழுவதும் போர்த்திக் கொண்டு புடவை கட்டிக் கொண்டு வர.

இந்த பதிவை முன்னோட்டம் என்றும் கூறலாம், அல்லது டீசர் என்றும் கூறலாம். அல்லது பதிவு என்றும் கூறலாம், அல்லது - அட போங்கப்பா. என்ன வேணா சொல்லுங்க. இதோ பதிவு.

 

இது எது மாதிரியும் இல்லாத புது மாதிரியான முயற்சி ஆகும். நன்றாக இருந்தால் எனக்கு நன்றி தெரிவியுங்கள். இல்லை என்றால் இந்த பதிவை ரசிக்கும் அளவிற்கு இன்னும் ரசனையை வளர்த்துக் கொள்ளாத உங்களை நீங்களே திட்டிக் கொள்ளுங்கள். வேறென்ன சொல்ல? இந்த பதிவில் நாம் ரசிக்கப் போகும் கதை தான் அடுத்த பதிவில் முக்கியமான ஒரு விஷயத்திற்கு முன்னோடி. அதனால் விரைவில் இந்த பதிவில் நம்முடைய கதைக்கு சென்று விடுவோம்.

வாசு காமிக்ஸ் என்ற ஒரு அற்புத பொக்கிஷத்தில் ஆவது இதழாக வந்த கதை தான் டாக்டரின் ஆவி. இந்த புத்தகம் அமேசான் வலை தளத்தில் கிட்டதட்ட ஆயிரத்து நானூறு டாலர்களுக்கு ($ 1,400) சமீபத்தில் விற்கப் பட்டது என்பது குறிப்பிட தக்கது. இந்த புத்தகத்தை வாங்கிய அதிர்ஷ்டசாலி யாரோ?

Doctarin aavi 1

 

டாக்டரின் ஆவி என்றால் என்ன? ஒரு டாக்டர் செத்துப் போவார். அவருடைய ஆவி வந்து அவரை கொன்றவர்களை பழி வாங்கும் என்று அரதப் பழசாக யோசிக்காமல் இந்த கதையை சற்று கூர்ந்து படியுங்கள். இது ஒரு விஞ்சான கதை. விஞ்சானி பீட்டர் என்பவர் ஒரு பின் நவீனத்துவ முன்னோடி கருத்துக்களை கொண்ட பகுத்தறிவுவாதி. லண்டனில் இருக்கும் இவரை உலக விஞ்சானிகள் சங்கத்தில் சேர்க்க மறுத்து விடுவதால் அவர் மனம் நொந்து தன்னை பழித்த இந்த சமுதாயத்திற்கு தான் யார் என்பதை நிரூபித்துக் காட்ட தன்னைத்தானே கொல்ல முடிவு செய்கிறார்.

 

 

Doctarin aavi 2

இந்த கூடு விட்டு கூடு பாய்வதைப் போல ஒரு மனிதனின் ஆவியானது மற்றுமொரு ஆவிக்கு வெஸ்டர்ன் யூனியன் மணி ட்ரான்ஸ்பர் போல ஆவி ட்ரான்ஸ்பர் செய்துக் காட்ட முடியும் என்பது அவரது ஆராய்ச்சியின் முடிவு. அதனால் அவர் அவருடைய அந்த அற்புத கண்டுபிடிப்பான மருந்தை உட்கொண்டு இறந்து விடுகிறார். அவரது மரணத்தை அவரது ஆஸ்பத்திரியிலேயே உறுதி செய்து அவரை ஒரு மயானத்தில் புதைத்து விடுகிறார்கள்.

 

 

 

 

 

 

Doctarin aavi 3

 

அதன் பின்னர் அவரை இந்த உலகம் மறந்து விடுகிறது. தமிழ் எழுத்தாளரும் என்னுடைய நண்பருமாகிய பட்டுக் கோட்டை பிரபாகர் அவர்கள் எழுதிய ஒரு நாவலின் தலைப்பை இங்கு உபயோகப் படுத்தி அவரின் நிலையை மக்களுக்கு விளக்குகிறேன்: இனி அவன் இறந்தவன்.

 

பின்னர் டாக்டர் பீட்டர் தன்னுடைய அற்புத மருந்தின் உதவியால் தன்னுடைய ஆவியை அவரது மருத்துவமனையில் பனி புரியும் நர்ஸ் ஆன லீலா'வின் உடலில் புகச்செய்கிறார். அதன் பின்னர் நர்ஸ் லீலா டாக்டர் பீட்டர் 'இன் ஆவி புகுந்ததால் டாக்டர் பீட்டர் ஆக மாறி விடுகிறாள். ஆம், இப்போது அவள் உடலால் லீலா, சிந்தனையில் டாக்டர் பீட்டர் . இதனைத்தான் கவிச் சக்கரவர்த்தி கம்பன் ஓர் உடல் ஈருயிர் என்று கூறினாரோ?

 

Doctarin aavi 4

Doctarin aavi 5

பின்னர் லீலா டாக்டர் பீட்டர் 'ன் உடல் புதைக் கப்பட்ட மயானத்துக்கு சென்று அந்த உடலை வெளிக் கொணர்ந்து அந்த உடலுக்குள் மறுபடியும் புகுந்து கொள்கிறார் (அதாவது இப்போது பீட்டர் உடலில் பீட்டர் , லீலா உடலில் லீலா - நோ கன்பூசன்).

Doctarin aavi 6 இனிமேல் என்ன நடக்கும்?

டாக்டர் பீட்டர் இந்த சமுதாயத்தை வஞ்சம் தீர்த்துக் கொண்டாரா?

லீலாவின் நிலை என்ன? அவளை டாக்டர் பீட்டர் அடைந்தாரா?

லீலாவின் காதலன் ஜான்சன் என்ன ஆனான்?

இந்த டாக்டரின் ஆவியை எப்படி அழிப்பது?

அப்படியே அழித்தாலும், செத்துப்போன ஒருவரை கொன்றால் உங்களுக்கு சட்டப்படி தண்டனை உண்டா?

இது போன்ற பல கேள்விகளுக்கு பதில் தெரிய வேண்டும் என்றால் அடுத்த பதிவை படியுங்கள் - என்று சொல்வேன் என்று எதிர் பார்த்தீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஏமாந்து போய் விட்டீர்கள்.

 

 

 Vijayanthi IPS ஆம், இவ்வளவு விலை கொடுத்து வாங்கிய ஒரு புத்தகத்தை நான் அவ்வளவு சுலபத்தில் உங்களுக்கு அனுபவிக்க கொடுப்பதாக இல்லை. அப்போது அடுத்த பதிவில் அப்படி என்னதான் வரப் போகிறது என்று கேட்பவர்களுக்கு - தொடர்ந்து படியுங்கள்.

1990ம வருடத்ய்தில் வந்த தெலுங்கு படம் கர்த்தவ்யம். இந்தப் படத்தில் இரண்டு சிறப்பு அம்சங்கள் உண்டு. ஒன்று - இதுதான் மொக்கை படங்களில் பாடல் காட்சிகளில் மழையில் நனைந்து "திறமை" காட்டிக் கொண்டு இருந்த விஜய சாந்தியை ஒரு கட்சியின் தலைவியாக மாற்றும் அளவிற்கு ஹிட் ஆகி அவரின் தலை எழுத்தை மாற்றிய படம். இரண்டாவது சிறப்பு அம்சம் என்ன என்பதை நீங்கள் கூற வேண்டும். அப்படி கூறுபவர்களுக்கு அந்த சிறப்பு அம்சத்தை மறுபடியும் காணும் வாய்ப்பை அளிப்பேன்.

 

இந்த கர்த்தவ்யம் படம் தான் தமிழில் வைஜெயந்தி ஐ.பி.எஸ் என்ற பெயரில் வந்தது.

karthavyam 

நம்முடைய அடுத்த பதிவிற்கும் இந்த கர்த்தவ்யம் படத்திற்கும் என்ன சம்பந்தம்?

இந்த வைஜெயந்தி ஐ.பி.எஸ் படத்திற்கும் குடும்ப குத்து விளக்கு நடிகை சிநேகா அவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

இல்லை, பத்தினி தெய்வம் நடிகை நமீதா அவர்களுக்கும் நம்முடைய அடுத்த பதிவிற்கும் என்ன சம்பந்தம்?

நம்முடைய இந்த பதிவிற்கும் நம்முடைய அடுத்த பதிவிற்கும் என்ன சம்பந்தம்? (இது கொஞ்சம் ஓவர் தான்).

bhavani35

BHAVANI

NAMITHA IPS

 

 

 

 

 

 

 

 

 

தெரிந்து கொள்ள நீங்கள் ஜூன் ஒன்பதாம் தேதி, இதே வலை தளத்திற்கு வந்து விடையை காணுங்கள். அது வரைக்கும், டொட்ட டைந்க். (ஒன்று மில்லை, நம்ம ராணி காமிக்ஸ் ஹீரோ டைகர் கதையை சமீபத்தில் ஆங்கிலத்தில் படித்தேன், அதான்).

உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?

நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Sunday, December 28, 2008

மாயாவியும் மந்திரவாதியும் & காப்பி அடிக்கும் காமிக்ஸ்'ம்

Vasu Comics MM Cover

அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன். என்னுடைய முதல் பதிவில் இருந்த உண்மைகளை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். எனக்கு வந்த பல மின்னஞ்சல்களில் வாசக அன்பர்கள் முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் போன்ற காமிக்ஸ்'களின் முகமூடியை கிழிக்குமாறு கேட்டு கொண்டனர். அதன் விளைவே இந்த பதிவு. என்னுடைய முதல் பதிவில் பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி.

நிற்க.

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த அவர்கள் நடிப்பில் வெளிவந்த "மன்னன்" என்ற திரைப் படத்தை நம்மில் பலருக்கு நினைவிருக்கும். அந்த படத்தை தெலுங்கு மொழியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி அவர்கள் நடிப்பில் "காரானா மொகுடு" என்ற பெயரில் தெலுங்கில் பெரும் வெற்றி பெற்றது. அந்த திரைப்படத்தில் நக்மா மற்றும் வாணி என்ற இரண்டு குடும்ப குத்து விளக்குகளின் "திறமை" முழுவதுமாக வெளிப் பட்டது. அதனால் அந்த படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு "அர்ஜுன்" என்ற பெயரில் வெளிவந்தது. வந்தாரை வாழ வைக்கும் தமிழன் நக்மாவில் திறமையில் மயங்கி இந்த படத்தையும் வெற்றி பெற வைத்தான். அதாவது, தமிழில் வெளிவந்த ஒரு படத்தின் தமிழாக்கத்தையும் நாம் வெற்றி பெற வைப்போம்.

தொடர்க.

சென்ற பதிவில் நான் குறிப்பிட்டதை போலவே நமது தமிழ் நாட்டு சித்திர கதைகளை மைய்யமாக கொண்டே பல காமிக்ஸ் கதைகள் வெளிவந்தன என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போது நான் கூறப் போகும் செய்தியால் நெடுநாள் முத்து காமிக்ஸ் ரசிகர்களாகிய முத்து விசிறி, காமிக்ஸ் டாக்டர், கிங் விஸ்வா போன்றவர்கள் அதிர்ச்சி அடையலாம்.

ஆனாலும் உண்மை என்பதை அவர்களும் அறிந்து கொள்ளட்டும். முத்து காமிக்ஸ்'இல் வந்த பெய்ருட்டில் ஜானி என்ற கதையை உங்களில் பலருக்கு நினைவிருக்கும். ஆனால் அந்த கதையின் ஆதாரம் என்ன? என்று எப்போதாவது நீங்கள் யோசித்து உண்டா? அந்த கதையின் ஆதாரமே இந்த பதிவில் நான் இடப் போகும் வாசு காமிக்ஸ் என்ற தமிழக சித்திரக்கதை பொக்கிஷமே என்பதை நீங்கள் அறிய வேண்டும்.

இதை தவிர முன்னாள் தமிழக முதலமைச்சர் அறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய (மிகவும் புகழ் பெற்ற ஓர் இரவு, வேலைக்காரி) போன்ற கதைகளின் முன்னோடி என்ன என்பதையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் நான் மேலே குறிப்பிட்ட வாசு காமிக்ஸ் அவ்வளவு சிறப்பான வரலாறு பெற்றது. சென்னை ராயப்பேட்டையில் இருந்து வெளிவந்த வாசு காமிக்ஸ் இதழின் கதைகளை இங்கிலாந்து நாட்டில் இருந்து வெளிவந்த ப்ளீட்வே என்ற நிறுவனம் காப்பி அடித்தது. அதன் கதைகளை சிவகாசியில் இருந்து வெளிவந்த முத்து காமிக்ஸ் தமிழில் மொழி பெயர்த்து வெளி இட்டது.

அதாவது, தமிழில் வெளிவந்த "மாயாவியும் மந்திரவாதியும்" என்ற கதையை இங்கிலாந்து ப்ளீட்வே நிறுவனம் ஆங்கிலத்தில் வெளி இட, அதனை தான் முத்து காமிக்ஸ் மொழி பெயர்த்து வெளிஇட்டது. ஆங்கிலேய மோகம் பிடித்து அலையும் நாம் "ஆஹா, ஒஹோ" என்று இதையும் பாராட்டுகிறோம். மேலே நான் கூறிய "மன்னன்" படமும் "அர்ஜுன்" படமும் இப்போது உங்களுக்கு விளங்கும் என்று நம்புகிறேன். இன்னமும் இதனை நம்பாத சில வாசகர்கள் இருக்க கூடும். அவர்களுக்கே இந்த பதிவு. இது மட்டும்மில்லை. வாசு காமிக்ஸ் இதழின் ஓவியர் துளசி அவர்களின் சித்திர தரம் எப்படி பட்டது என்றால், மும்பையில் இருந்து வெளிவந்த அமர் சித்திரக் கதை என்ற கதை வரிசையில் வெளி வந்த படங்கள் கூட இந்த கதையை அடிப்படையாக கொண்டு வந்தவையே ஆகும்.

என்னடா இவன்? முதலில் ஜானி நீரோ கதையை காப்பி என்றான், பிறகு அறிஞர் அண்ணாவின் கதைகளையும் கூறினான், இப்போது அமர் சித்திர கதைகளையும் கூறுகின்றானே என்று நீங்கள் வியக்கலாம். தொடந்து படியுங்கள். உங்களுக்கே உண்மை விளங்கும்.

சில வாசகர்கள் மட்டும் என்னடா இந்த அட்டைப் படத்திற்கும் கதைக்கும் சம்பந்தமே இல்லையே? என்று வினவலாம். ஆழ்ந்து யோசித்தால் இந்த ஒரு யுத்தியையும் நமது லயன் மற்றும் முத்து காமிக்ஸ் இதழ்களில் காப்பி அடித்து இருப்பார்கள். உதாரணத்திற்கு முத்து காமிக்ஸ் இதழ் எண் 305'ல் வெளிவந்த "கதை சொல்லும் கொலைகள்" இதழின் அட்டையை பாருங்கள். கதைக்கும் அட்டைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும், இந்த மாயாவியும் மந்திரவாதியும் அட்டையை போல.

இப்போது கதைக்கு போகலாம்: முதல் பக்கத்தை பாருங்கள். இதில் தான் கதையின் இரண்டு Vasu Comics MM Page 1வில்லன்கள் அறிமுகம் ஆகிறார்கள். கதாசிரியர் அவர்கள் இருவரையும் எப்படி புலி மற்றும் நரியின் கூட்டணி என்று கூறி படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறார் என்பதை கவனியுங்கள். இதில் குண்டப்பா என்பவர் தான் மந்திரவாதி ஆவார். ஏன் இதனை குறிப்பிடுகிறேன் என்றால் சில நேரங்களில் லயன் மற்றும் முத்து காமிக்ஸ்'களில் வரும் கதைகளின் பெயரும் கதையும் தொடர்பில்லாமல் இருக்கும். ஆனால் இந்த கதை அப்படி பட்டது இல்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். இப்போது மந்திரவாதி வந்து விட்டார், பின்னாலேயே மாயாவியும் வருவார்.அதனால், கதையும் தலைப்பும் தொடர்பு உடையது என்பதை கதையின் முதல் பக்கத்திலேயே தெரிவித்தது விட்டோம். விட்டது ஒரு தொல்லை. இந்த கதையின் ஆசிரியர் திரு துளசி அவர்களை சற்று கூர்ந்து கவனித்து உங்களுடைய நியாபகத்தில் வைத்து கொள்ளுங்கள். ஏன் என்றால் இவர் அகில உலக புகழ் பெற்ற ஒரு நபர் ஆவார். அமெரிக்காவில் உள்ள ட்வின் டவர்ஸ் தாக்குதலுக்கு ஆளானபோது BBC, CNN என பல உலக தொலைக்காட்சிகள் இவரைத்தான் தொடர்பு கொண்டன. எனேன்றால் இவர் தான் இந்தியாவின் Nostradamus என்று அழைக்கபடுபவர்.

 

Vasu Comics MM Page 2 & 3 கதையில் வரும் முக்கிய பாத்திரம் இந்த மன்னார்சாமி ஆகும். எலுமிச்சம் பழத் தோட்ட்டத்தை விற்று சினிமா கதாசிரியர் ஆகும் ஆசையில் இருக்கும் இவருக்கு பொன் சிலை போன்ற அழகான இரண்டு பெண்கள்: முறையே சுமதி மற்றும் கலா ஆகும். இந்த கலாவை பலரும் ரசித்து "கலா-ரசிகர்கள்' என்றும் கூறிக் கொண்டனர். இந்த மன்னர்சமியை சந்திக்கும் இரண்டு வில்லன்களும் அவரிடம் தாங்கள் சினிமா தயாரிப்பாளர்கள் என்று கூறி அவரின் பணத்தையும், தோட்டத்தையும் காணாமல் போகச் செய்தனர்.

இந்த படத்தில் மன்னார்சாமி எப்படி உட்கார்ந்து இருக்கிறார் என்பதை கவனியுங்கள். இது தான் ஜப்பானிய "இகிடோ - ஹட்சுமி" என்ற மனக் கட்டுப்பாட்டு கலையின் அடிப்படை ஆகும். இந்த "இகிடோ - ஹட்சுமி" பற்றி வேறு விபரங்கள் வேண்டும் என்றால் நமது காமிக்ஸ் டாக்டரை கேளுங்கள். தமிழ்வாணன் அவர்கள் எழுதிய "டோக்கியோ ரோஜா" என்ற கதையிலும் கூட இந்த "இகிடோ - ஹட்சுமி" கலையை சங்கர்லால் பின்பற்றுவதை வாசகர்கள் நினைவு கூறலாம்.

பின்னர் மன்னார்சாமி இரண்டு வில்லன்களிடமும் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாகிறார். தென் தமிழகத்தின் மிகப் பெரிய எலுமிச்சை தோட்ட அதிபர் இப்படி கடன் வாங்குவது பலருக்கு அதிர்ச்சியை தந்தாலும், அப்போதே இந்த Economic slow down பற்றி ஆசிரியர் எழுதி இருக்கிறார் என்பது நமக்கு தெரிகிறது. இது போன்ற பல சம்பவங்களை நமக்கு முன்னரே தெரிவித்ததால் தான் இந்த கதாசிரியர் துளசியை தமிழகத்தின் Nostradamus என்று பல அறிவியல் அறிஞர்கள் கூறுவர். இதே கதாசிரியர்தான் தமிழகத்தில் மின்சார தட்டுப் பாடு வரும் என்பதை தன்னுடைய "நாட்டுப்புற மாயாவி" என்ற கதையில் மிக அழகாக கூறி இருப்பார்.

Vasu Comics MM Page 8 & 9ஓர் இரவு: கடன் தொல்லையால் வீட்டையே இழககும் நிலை வரும்போது இளைய மகள் சுமதி தான் வேலை பார்க்கும் வீட்டு அம்மாவிடம் தன்னுடைய பணம் ரூபாய் ஐந்தாயிரத்தை வாங்கி வருகிறாள். அந்த ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களே இந்த கதைக்கு அடித்தளமாக அமைகின்றன. வாசக அன்பர்களே, இப்போது புரிகின்றதா அறிஞர் அண்ணாவின் ஓர் இரவு கதைக்கும் இந்த காமிக்ஸ் கதைக்கும் உள்ள தொடர்பு?

ஆனால், அப்போது தான் விதி அவள் வாழ்க்கையில் விளையாடுகிறது. விதி வலியது என்பது நம்மில் பலருக்கும் தெரியும்: ஆனால் விதி கொடியது என்பதை இப்போது தெரிந்து கொள்ளுங்கள். பெருமழைக்கு ஒரு மரத்தடியில் ஒதுங்கும் சுமதியை ஒரு நாகம் தீண்டிவிடுகிறது. அவள் அந்த நொடியிலேயே உயிர் துறக்கிறாள்.

அவளை பின் தொடந்து வந்த ஒரு மர்ம உருவம் அவளிடம் இருந்த ரூபாய் ஐந்தாயிரத்தை எடுத்து கொண்டு சென்று விடுகிறது. இப்படியாக விதியின் சதியால் சுமதி பணத்தை கொடுத்து கடனை அடைக்க முடியாமல் இறந்ததால் மன்னர் சாமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொள்ளுகிறார்

Vasu Comics MM Page 14 & 15 Vasu Comics MM Page 38 & 39 அதனால் மிகுந்த வருத்தமுற்ற கலா தன்னுடைய பெயரை துர்கா என்று மாற்றி கொண்டு தன்னுடைய குடும்பத்தை சீர்குலைத்தவர்களை பழி வாங்க சபதம் பூண்டாள். அதனால் அவள் மருதன் வீட்டிலேயே வேலைக்கு செல்கிறாள். அப்போது மாயாவி அங்கு வருகிறார். (அப்பாட, ஒரு வழியாக கதைக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் உண்டு என்பதை நாம் நிரூபித்து விட்டோம் - அதுவும் பதினான்காம் பக்கத்திலேயே).

இவர் யார்? இவருக்கு ஏன் மாயாவி என்று பெயர் வந்தது? இது போன்ற பல கேள்விகள் உங்கள் மனதில் எழுந்தாலும் அதை கட்டுப்படுத்தி கொண்டு படியுங்கள் (கதையை முழுவதுமா படித்த எனக்கே புரியல. பதினாலு பக்கம் படிச்ச இவருக்கு புரியணுமாம் = ஆசை, தோசை அப்பளம் வடை). மாயாவி துர்காவாகிய கலாவுக்கு உதவி செய்வதாக கூறி விடை பெறுகிறார்.

வேலைக்காரி: பிறகு இரண்டு கயவர்களில் ஒருவராகிய குண்டப்பா அங்கு வருகிறார். அவர் ஒரு பெண் பித்தன் என்பது தெரிந்தாலும் கடமையே கண்ணாக கொண்ட துர்கா தன்னுடைய சேலை விலகி இருப்பதை உணராமல் இருக்கிறாள். இந்த சம்பவங்களை அடிப்படையாக கொண்டே "வேலைக்காரி" உருவானதாக பலர் கூறுவர்.

Vasu Comics MM Page 44 & 45 Vasu Comics MM Page 46 & 47 பின்னர் தனனுடைய குடும்பத்தை நடுத்த் தெருவிற்கு கொண்டு வந்த இரண்டு கயவர்களில் ஒருவனை (குண்டப்பா) துர்கா கொன்று விடுகிறாள். மற்றும் ஒரு காமக் கொடூரன் ஆகிய வட இந்திய சேட் ஒருவனையும் துர்கா கொள்கிறாள். கடைசியாக மருதனை கொல்ல முயலும்போது மருதன் உன்மயை தெரிந்து கொள்ளுகிறார். மருதன் தனனுடைய துப்பாக்கியால் துர்காவை கொல்ல முயலும்போது மருதனின் முதல் தாரத்தின் மகனாகிய சேகர் அங்கு வந்து தோட்டாவை தான் வாங்கி கொள்கிறார். அதனால் கோபமுற்ற மருதன் சேகரை தூணில் கட்டி வைக்கிறார்.

Vasu Comics MM Page 48 & 49 Vasu Comics MM Page 50 & 51 அப்போது அருகில் இருந்த அறையில் இருந்த டி.வீ.யில் ஒரு படம் வந்தது. இந்த காட்சியை காணுங்கள். இதில் இருந்து தான் அமர் சித்திர கதைகள் உருவாகியது என்பதற்கு இரு வேறு கருத்து இருக்க முடியுமா?

 

 

 

Vasu Comics MM Page 52 & 53 Vasu Comics MM Page 60 & 61

Vasu Comics MM Page 62 & 63

 

 

 

 

 

 

 

உலகப் புகழ் பெற்ற பஞ்ச தந்திர கதைகள் உருவான அடிப்படை இந்த காக்கா-குஞ்சு கதை தான் என்று நான் சொல்ல மாட்டேன். ஏன் என்றால் அதன் அடிப்படை என்ன என்பது எனக்கு தெரியும். அப்போது சேட்'இன் தங்கம் இருக்கும் பெட்டியுடன் ஓட நினைக்கும் மருதனை மாயாவி வழி மறிக்கிறார். இந்த சண்டை காட்சியை பாருங்கள். பெய்ருட்டில் ஜானி என்ற முத்து காமிக்ஸ் புத்தகத்தில் இருந்தும் இரண்டு பக்கங்களை இங்கு ஸ்கான் செய்து உங்களின் பார்வைக்கு அளித்து உள்ளேன். ஒரு பானை சோற்றுக்கு ஓரு சோறு பதம் என்பது போல ஒரு காமிக்ஸ் காப்பி அடிக்கும் என்பதிற்கு இரண்டு பக்கங்களே போதும்.

 Muthu Comics Beirutil Jani Page 20 & 21 Muthu Comics Beirutil Jani Page 18 & 19

இந்த சண்டை காட்சிகளை கண்டு வியந்த இயக்குனர் ஷங்கர் இது போன்ற ஓரு சண்டை கட்சியை தன்னுடைய இயந்திரன் படத்தில் வைத்து இருப்பதாக தகவல். நண்பர் கேபிள் ஷங்கர் அவர்களிடம் இதைப் பற்றி உறுதி செய்ய வேண்டும்.

 

 

 Vasu Comics MM Page 64

ஓரு வழியாக தீமை அழிந்து நன்மை வாழ்வதாக இந்த கதை முடிகிறது. ஆனால் இந்த கதையுடன் பல தொடர்புகள் இன்றைய சமூக வாழ்க்கைக்கு இருப்பதாக நான் நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களை எனக்கு என் நீங்கள் பின்னுட்டமாக பதிய கூடாது?

 

காமிக்ஸ் டாக்டர் தன்னுடைய வலைப்பூவில் ஏதோ பெரிதாக முத்து காமிக்ஸ் மாயவியிடம் இருந்து கடிதம் இருப்பதை கூறினார். ஆனால் அதன் அடிப்படை என்ன என்பதை இங்கு நீங்கள் பாருங்கள்.

 

 

Intro

next issue coming soon

நம்முடைய கிங் விஸ்வா, ரபிக் ராஜ போன்றவர்கள் தங்களுடைய வலைப் பூவில் சும்மா அடுத்த பதிவு இது என்று போட்டு நம்ம உயிரை எடுக்கிறார்கள். அதனால் தான் நானும் இப்படி ஓரு உத்தியை கொண்டு வந்து இருக்கிறேன். இந்த ஒன்பது கதையில் எந்த காவியத்தை அடுத்த பதிவாக போட வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு வோட்டு அளித்து தெரிவியுங்களேன்? ஆனால் டாக்டரின் ஆவி என்ற கதை பலரின் கவனத்தை கவரும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.

Doctarin Aaavi

irumbuk kai Edison Aavigaludan Maayavi

இந்த டார்ஜான், டார்ஜான் என்று பலர் கூறுவார்களே, அந்த டார்ஜானின் பிறப்பிடம் இந்த கருமலை தீவு என்ற கதையே ஆகும். மேலும் முத்து விசிறி அவர்கள் பதிவிட்ட கொலைகார கலைஞன் என்ற கதையின் மூலம் இந்த கோமாளியின் கொலைகள் தான் என்பதை என்பதை நான் சொல்லவும் வேண்டுமோ?

MalaiVaasalil Maayavi Karumalai Theevu Komaaliyin Kolaigal

உறைபனி மர்மம் என்ற கதையில் நமது இரும்புக்கை மாயாவி தோன்றுவார். அந்த கதையின் மூலம் இந்த பனித்தீவில் மாயாவி என்ற கதை ஆகும். இதை பற்றி நமது முத்து விசிறி தனது அடுத்த பதிவில் விரிவாக எழுதலாமே?

மெக்சிகோ மாயாவி என்ற கதை ஆங்கிலத்தில் வந்து விட்டது. நம்முடைய முத்து காமிக்ஸ் தான் அதனை தமிழில் வெளி இட வில்லை. அதைப் போல பழைய முத்து காமிக்ஸ் வாசகர்கள் முகமூடி வீரர் வேதாளன் தோன்றும் "முத்திரை மோதிரம்" என்ற கதையே மோதிர விரல் என்று கீழே உள்ள கதை என்பதை உணரலாம்.

pani theevil Maayavi mexico Maayavi Modhira Viral

உங்களின் விமர்சனங்களை எனக்கு என் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?


நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.

Related Posts with Thumbnails