
பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய அனைத்து காமிக்ஸ் ரசிகர்களுக்கும் எனது நன்றிகளையும் மரியாதை கலந்த வணக்கங்களையும் தெரிவித்து கொள்ளுகிறேன்.
நம்முடைய சென்ற சினிமா சம்பந்தப்பட்ட பதிவுகளாகிய (தமிழ் காமிக்ஸ் உலகில் சிங்கம்) மற்றும் (தமிழ் காமிக்ஸ் உலகில் சுறா) மக்களிடம் சிறந்த வரவேற்பை பெற்றது நினைவிருக்கும். அதனால் இனிமேல் அதனைப்போலவே சில பல பதிவுகளை இடலாம் என்று பலரும் கூறி இருந்தனர். குறிப்பாக கோவையிலிருந்து மருத்துவர் திரு கந்தசுவாமி அவர்கள் கொடுத்த வரவேற்பே இந்த பதிவின் மூலக்காரணம். அவருக்கு எங்கள் நன்றிகள்.
இன்று இந்தியாவின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த "எந்திரன்" என்ற படம் ரிலீஸ் ஆகி உள்ளது. எனவே நமது காமிக்ஸ் உலகில் இதுவரை வந்துள்ள ரோபோ மற்றும் இயந்திர மனிதர்களை பற்றிய தொடர் பதிவை நம்முடைய பயங்கரவாதி டாக்டர் செவன் அவர்கள் ஏற்கனவே ஆரம்பித்து விட்டார் (கம்ப்யூட்டர் மனிதன்).
நானும் நம்முடைய பங்கிற்கு இந்த படத்தை இன்று காலை முதல் நாள் முதல் காட்சியாக கண்டு ரசித்தேன் (உபயம்: நண்பர் கிங் விஸ்வா). படத்தை பார்பதோடில்லாமல் இலவசமாக ஜூஸ், பாப் கார்ன், சிக்கன் பப் மற்றும் சிப்ஸ் உடன் (அனைத்துமே இலவசம் என்பது வேறு விஷயம்) படத்தை ரசித்தேன். அந்த படத்தை பார்க்கும்போது எனக்குள்ளே சில காமிக்ஸ் சிந்தனைகள் ஊற்றெடுத்து சிறகடித்து பறந்தன. ஆம், அந்த சிந்தனைகளை அலசவே இந்த பதிவு. படத்தின் விமர்சனம் பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள். ஆனால், காமிக்ஸ் பற்றியும் அதில் உள்ள ஒற்றுமைகளை பற்றியும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
அது சரி, காமிக்ஸ் சம்பந்தம் உண்டு என்று சொல்கிறீர்களே, எந்த காமிக்ஸ் கதையுடன் என்று கேட்டால்? இதோ பதில்: இரும்புக் கை மாயாவி. ஆம், தமிழ் காமிக்ஸ் உலகின் மறக்கமுடியாத கதாபாத்திரமாக விளங்கும் இரும்புக்கை மாயாவி கதாபாதிரதிர்க்கும் இந்த எந்திரன் பாதிரதிர்க்கும் பல ஒற்றுமைகள் உண்டு. இனி அவற்றை விரிவாக அலசுவோம்:
முதல் ஒற்றுமை:
வழக்கமாக இரும்புக்கை மாயாவியின் உடலில் மின்சாரமோ அல்லது மின்னலோ பாய்ந்தால் அவரது உடலில் ஒரு மாற்றம் நிகழ்ந்து அவரின் உடல் கண்ணுக்கு புலப்படாமல் மறைந்துவிடும். அவரது இரும்புக்கை மட்டுமே கண்ணுக்கு தெரியும். அதைப்போலவே இந்த எந்திரன் படத்திலும் விஞ்ஞானி ரஜினி தன்னுடைய ரோபோவாகிய சிட்டிக்கு உணர்சிகளை கொண்டுவர முயற்சி செய்கிறார். அப்போது எதுவுமே பயன்படாதபோது, ஒரு மின்னல் தாக்கி அந்த ரோபோவிடம் சில பல மாற்றங்கள் நடந்து அந்த ரோபோவிற்கு உணர்சிகள் வந்துவிடுகிறது. அதற்க்கு பிறகு தான் கதையே அட்டகாசமாக துவங்குகிறது. ஆகையால், இந்த முதல் ஒற்றுமை ஓக்கேவா?
இரண்டாம் ஒற்றுமை:
இரும்புக்கை மாயாவியின் சிறப்பு ஆயுதங்களில் ஒன்று அவரது விரல் துப்பாக்கி. அதைப்போலவே இந்த படத்திலும் நம்முடைய ரோபோ சிட்டி தானே சுயமாக சிந்திக்கும் இரண்டாம் பகுதியில் தன்னுடைய விரலில் ஒரு விரல் துப்பாக்கியை பொருத்திக்கொள்கிறது.
மூன்றாவது ஒற்றுமை:
வழக்கமாக இரும்புக்கை மாயாவிக்கு எப்போது சங்கடம் வருமென்றால் அவரது உடலில் மின்சாரம் குறைந்து அவரது மாயத்தன்மை குறைந்து அவரது உடல் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்து விடும். அப்போது அவர் உடனடியாக வேறொரு மின்சார சக்தியை தேடுவார். அப்படி மின்சாரமே இல்லை என்றால் கார் எள்ளது வேறு ஏதாவது எஞ்சின் பேட்டரியில் இருந்து அந்த பவரை உபயோகித்து மாயமாக மறைவார்.
அதைப்போலவே இந்த படத்திலும் ரஜினி உருவாகிய ரோபோவாகிய சிட்டியை அழிக்க ரஜினி திட்டம் தீட்டுவார். அதன் முதல் கட்டமே நகரின் அனைத்து மின்சார இணைப்பையும் துண்டித்து, ஜெனரேடரை செயலிழக்க வைத்து அதன் பின்னர் சிட்டி உருவாகிய அனைத்து ரோபோக்களும் பேட்டரி இல்லாமல் முடக்கப்படும்போது வெற்றி பெறலாம் என்பதே. அதன்படி ரஜினி எல்லாவற்றையும் செய்துவிடுவார். ஆனால் ரஜினி உருவாக்கிய அந்த ரோபோ (சிட்டி) உடனடியாக ஒரு காரை நிறுத்தி அந்த காரின் பேட்டரியில் இருந்து தனக்கு தேவையான சக்தியை பெற்று ரீ சார்ஜ் செய்துக்கொள்ளுகிறார்.
இப்படியாக தமிழ் காமிக்ஸ் உலகின் இணையற்ற ஹீரோவாக திகழும் இரும்புக்கை மாயாவியுடன் பல ஒற்றுமைகளை எந்திரன் படம் கொண்டுள்ளது. அந்த படத்தை கண்டு ரசியுங்கள்.
எந்திரன் விமர்சனம்:
படம் உண்மையிலேயே அட்டகாசம். காமிக்ஸ் பிரியர்கள் ரசித்து பார்க்கலாம். படத்தின் முதல் பாகம் நேரம் போவதே தெரியாமல் போகிறது. ஆனால் இரண்டாம் பகுதியில் சில காட்சிகளையும் ஒரு பாடலையும் தயவு தாட்சண்யம் இல்லாமல் கத்திரி போடலாம். போட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். கடைசி முப்பது நிமிடங்கள் சூப்பர்.
கதை:
வசீகரன் (ரஜினி) ஒரு ரோபோடிக்ஸ் விஞ்ஞானி. அவரது ஆராய்ச்சியின் குறிக்கோளே தனியே இயங்கும் ஆற்றல் கொண்ட ஒரு ரோபோவை தயாரிப்பதுதான். அதனால் அவர் மருத்துவம் படிக்கும் சனாவை கூட (ஐஸ்வர்யா ராய் பச்சன்) கண்டுகொள்ளாமல் தன்னுடைய உதவாக்கரை (நம்பிக்கை துரோகம் செய்யும்) உதவியாளர்களுடன் (சந்தானம் மற்றும் கருணாஸ்) ஆராய்ச்சியில் மூழ்கி இருக்கிறார். அப்படி அவர் தயாரிக்கும் ஒரு ரோபோவை அவரது குருவாகிய டேனி (அந்நியன் தொலைகாட்சி தொடரில் வந்தவர்) இந்த ரோபோவிற்கு உணர்சிகள் இல்லை என்று கூறி நிராகரித்து விடுகிறார். அதனால் அந்த ரோபோவிற்கு உணர்சிகளை உருவாக்குகிறார் ரஜினி.
அந்த ரோபோ சனாவை காதலிக்க துவங்குகிறது. ரஜினி அதனை அழித்து விடுவதாக மிரட்டுகிறார். அதனால் அந்த ரோபோ ராணுவ அதிகாரிகளிடம் வைரமுத்துவின் கவிதையை சொல்லி ரஜினியை அவமானப்படுத்தி விடுகிறது. கடுப்பாகிவிடும் ரஜினி அந்த ரோபோவை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து குப்பி தொட்டியில் போட்டு விடுகிறார். அதனை டேனி மறுபடியும் ஒன்றுசேர்த்து அதற்க்கு அழிக்கும் சிந்தனையை ஒரு ரெட் சிப்பில் வைத்து விடுகிறார். அந்த ரோபோவும் கல்யாண மண்டபத்தில் நுழைந்த சனாவை தூக்கிகொண்டு சென்று விடுகிறது. அதற்க்கு பிறகு ரஜினி அந்த ரோபோவிடம் இருந்து எப்படி தன்னுடைய காதலியையும், நாட்டையும் காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.
ஒரே ஒரு குறை: ரஜினி என்ற மாய பிம்பத்தை துரத்தி, துரத்தியே ஒரு சூப்பர் ஸ்டாரை மட்டுமே காணத்துடிக்கும் பலகோடி ரசிகர்கள், இந்த படத்தை பார்த்தவுடன் தமிழகம் எவ்வளவு பெரிய வில்லன் நடிகரை (அல்லது நடிகரை) இழந்துள்ளது என்பதை அந்த வில்லன் ரோபோ ரஜினி செய்யும் அசத்தலான, அதே சமயம் அலட்டல் இல்லாத நடிப்பின் மூலம் உணருவார்கள். படத்தின் ஒரே நட்சத்திரம் அந்த ரோபோ ரஜினிதான்.
நண்பர்களே, இது வரை பொறுமையாக படித்தமைக்கு நன்றி. இதனைப் போலவே இன்னமும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கலாமா? அல்லது சிறப்பு நாட்களை பற்றிய பதிவுகளையாவது இடலாமா?
உங்களின் விமர்சனங்களையும் பதில்களையும் எனக்கு ஏன் நீங்கள் பின்னுட்டமாக இட கூடாது?
நன்றியுடன்,
ஒலக காமிக்ஸ் ரசிகன்.